செய்திகள்

ஜாதகத்தில் அடிப்படை வேர் லக்னம் - ரிஷபம் (பகுதி 2)

தினமணி

ரிஷபம் லக்கினம் என்பது காலபுருஷனுக்கு இரண்டாவது பாவ கட்டம், சுக்கிரன் இங்கு அதிபதியாக திகழ்கிறார். வேத ஜோதிடத்தில் சூரியன் என்றால் சிவன், அவர் எங்கிரிக்கரோ அங்கு அருகாமையில் சக்தி இருப்பாள் என்பது சூட்சம விதி. 

சூரியன் மேஷத்தில் உச்சவது போல் அதற்கு அருகில் உள்ள பாவமான ரிஷபத்தில் முதலில் 3 பாகையில் சந்திரன் உச்சமாகிறார் மீதி 27 பாகையில் மூலத்திரிகோணமாகவும் அமைகின்றன. இங்கு முழுமையாக சுக்கிரன் சந்திரன் அதிகம் அதிகமாக உள்ளது. காலபுருஷனுக்கு 2, 7-க்குரியவர் சுக்கிரன், குடும்ப என்ற கூட்டிணையும் களத்திரம் என்ற பிணைப்பையும் உருவாக்குபவர். 

ரிஷப லக்கினத்தில் கிருத்திகை 2,3,4ஆம் பாதங்களும், ரோகிணி நட்சத்திரமும், மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களும் அடங்கியுள்ளன. இங்கு நட்சத்திர சாரதிபதிகளான சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாயின் காரகத்துவம் உள்ளடங்கி உள்ளது. லக்கினம் விழும் புள்ளி எந்தெந்த நட்சத்திரம் சாரம் பெறுகிறதோ அங்கங்கு அதன் காரகத்துவம் மாறுபடும்.

ரிஷப லக்கினத்தின் அதிபதி சுக்கிரன் என்பவர் நன்மையும் தீமையும் சேர்ந்து அளிப்பவர் ஏனென்றால் சுக்கிரன் லக்னத்திற்கும் 6-ம் வீட்டிற்க்கும் அதிபதியாவதால் அரை அசுபராகிவிடுவார். யோகாதிபதி என்று கூறுபவர் சனி ஆனால் இங்கு பாதகாதிபதியாக மாறிவிடுவார். சனி தசா புத்தியில் அதிக பாதகத்தை கொடுப்பார். ரிஷப லக்னத்திற்கு முழு யோகாதிபதி புதன் ஆவர். 2-ம், 5-ம் வீட்டு ஆதிபத்தியம் பெற்றவர். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் மூலதிரிகோணம் பெற்றாலும், சந்திரனும் குருவும் மாரகத்திற்கு ஒப்பான கண்டதை ஏற்படுத்துவார் என்பது ஒரு விதி. இந்த லக்னத்துக்கு கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகள் நட்பு ராசிகளாக அமைகின்றன.

எருது சின்னம் 

வானவெளியில் இந்த ராசியில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தின் அமைப்பு எருதைப்போல தோற்றமளிக்கும் அதனால் இந்த சின்னம் ரிஷபம் என்றழைக்கப்பட்டது. ரிஷபம் என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் ‘எருது’ என்று பொருள். ஜாதகருக்கு எருதின் அமைப்பும் மற்றும் ஸ்திர தன்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். கொஞ்ச நடுத்தர உயரம், கம்பீரமாகத் தோற்றம், குனிந்தும், மிருதுவான காதுமடல் கொண்டவராகவும், தோல்கள் கடினத்தன்மையும், மெதுவான நடையும், விரிவான மூக்கும், பற்கள் சிறுத்தும் வரிசையாகவும், நெற்றி அகன்றும் காணப்படும். 

இதுதவிர பஞ்ச பூதங்களில் பிருத்வி(நிலம்) தத்துவத்திலும் ரிஷப லக்கின ஜாதகர் குணநலன்கள் பார்த்தால் பேச்சில் தேனாகவும், வசீகரத் தோற்றம் இருக்கும், கடின உழைப்பாளியாகவும், கோபம் தெரியாவண்ணம் இருக்கும். ஆனால் கோபம் அதிகமானால் அவர்கள் செயல் அதிரடியாக இருக்கும். அலங்காரப்பிரியராகவும், அழகும் கவர்ச்சியும், கலைநயம் கொண்டவராகவும், சரியான நேரத்தில் அறிவானது வெளிப்படும், ஞாபகசக்தி,  சகிப்புத் தன்மை, பிடிவாத குணம்,  மெதுவாக சாத்வ குணமாக தெரியும், எதிராளி பேசுவதை கவனமாக கேட்பார்கள்.

ஆண்டிடும் இடப லக்னம் பரமர்க்கு

அன்புறு பூசைசத் தியவான்

அற்பபோ சனவான் தூலதே கத்தன் 

அடிமையா ளன்புளிப் பிரியன் 

வேண்டிய கணிதன் வஸ்திரா பரணன்

மெல்லிய செவியினன் புத்தி 

விரும்பிய குழவி போல்விளை யாடி 

வெறியாய்ப் பிறர்பொருள் கொள்வான் 

இந்த ஜாதக அலங்காரத்தில் கூறப்படுவது என்னவெனில் இடப லக்கினக்காரர்கள் சிவபூஜையில் சிந்தை செலுத்துபவன், உண்மை பேசுபவன், உணவு குறைவாக உண்பவன், கொஞ்சம் குண்டானவன், பிறர்க் கீழே வேலை செய்பவன், புளிப்பு இவர்களுக்குப் பிடிக்கும், கணித வல்லுநர், உயர்ந்த ஆடை ஆபரணம் அணிபவன், புத்திசாலி, விளையாட்டுத்தனம் இருக்கும், பேராசை கொண்டவன், இருமல், கபம், கழுத்தில் வியாதி இவருக்கு இருக்கும் , மழலையர் பேசுவதைக் கேட்பவன், சிறுவயதில் அக்னி பயத்திற்கு ஆட்படுவான் என்று கூறப்படுகிறது.

கிருத்திகை 2,3,4 பாதங்கள்

கிருத்திகை 2,3,4 பாதத்தில் பிறந்தவர்கள் சுக்கிரன் சூரியன் காரகத்துவம் கலந்து இருப்பார்கள். இதுதவிர பாதங்களில் மாறுபடும். முருகப்பெருமானும் கிருத்திகை நட்சத்திரத்தில் தான் பிறந்தார். பொதுவாக ரிஷப கிருத்திகையில் பிறந்தவர்கள் குணநலன்கள் பார்த்தால் சாஸ்திரம் தெரிந்தவர்கள், மகிழ்ச்சியைத் தேடிச் செல்பவர்கள்,   தேவையற்ற சினம் கொண்டவர்கள், வெற்றியுடையவர்களை சினேகமாகக் கொண்டவர், நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார்கள், நண்பர்கள் கூட்டம் உண்டு, ஒழுக்கம் கடைப்பிடிக்கத் தவறியவன், நேசமும் நட்பும் உள்ளவர்கள், சுதந்திரத்தை விருபதக்கவர், ஒருசிலர் தீமை செய்பவராகவும் மற்றும் மற்றவர்களை மதிக்காதவராகவும் இருப்பார்கள். படிப்பு குறைவாக இருக்கும், பொறுமையற்றவர், எதாவது ஒருவகை துக்கம் இருக்கும், நல்ல தோற்றம் உள்ளவர்கள், சட்டென கோபம் வந்துவிடும், நேர்மையான எதிரிகள் உண்டு, கர்வம் கொஞ்சம் இருக்கும். 

ரோகிணி 1,2,3,4 பாதங்கள்

சந்திரனுக்கு மனதுக்கு பிடித்தவள் ரோகிணி, தட்சனின் 27 பெண்களில் ஒருவள். இதற்கும் ஒரு புராணக் கதையும் உண்டு. இந்த நட்சத்திரம் விண்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சௌபாக்கியமும், சௌந்தர்யமும்,  முரட்டுத்தன்மை இருக்கும், சிலருக்கு சிறு வியாதி இருந்துகொண்டு இருக்கும், கவிதை கற்பனையில் இருந்துகொண்டு இருப்பார். சினிமா துறை என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று, தன்மானமிக்கவன், கருணை அமைதி மிக்கவன், ஒழுக்கமானவன், வாய்மை மிக்கவன், சாந்த சொரூபி, ஜீவநேயம் கொண்டவன், குருவின் ஆசிர்வாதமிக்கவன், இசையில் ஆர்வ மிக்கவன், சூட்சம மந்திரம் ஜெபிப்பவன், இலக்கிய ஆர்வம் குறைவு, தெளிவான ஆராய்ச்சி ஈடுபடுவான், எல்லாரிடமும் இதமாக பேசி நோக்கை அடைவான்.

பிறருக்கு சொல்லிக்கொடுப்பதில் வல்லவர்கள். பெரிய பதவி நோக்கிச் செல்பவர்கள், பெண்களுக்குப் பிரியமானவராகவும், அறிவுரைகளைக் கேட்பார்கள், வருங்காலத்தை பற்றி யோசிப்பார், மெல்லிய குரலில் பேசுவார்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள், செல்வம் அதிகப்படுத்துவதில் ஆர்வம், பிள்ளைகள் மீது அதிக அன்பு கொண்டவர், பாராட்டு பெறுவார்கள், சுகபோக வாழ்க்கையை வாழபிடிக்கும், சோம்பேறித்தனமும் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு மோர், பழரசம், இளநீர், பசும்பால் பானங்களும் மற்றும் கார உணவு வகைகளும் பிடிக்கும்.   

மிருகசிரீஷம் 1,2 பாதங்கள்

இவை வான்வெளியில் நட்சத்திரங்கள் ஒன்றுகூடி மான் தலை போல, அல்லது தேங்காய் கண் போல் வானவெளியில் காட்சிதரும். இவற்றின் அதிபதி செவ்வாய் ஆகும். முதல் இரண்டு  பாதங்கள் ரிஷபத்திலும் மற்றவை மிதுனத்தில் இருக்கும். இது செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் இந்த லக்கினத்தில் துணிச்சல் அதிகம் இருக்கும்,  திடமான நம்பிக்கை அதைவிட அதிகம் இருக்கும், சுறுசுறுப்பானவர், செல்வமுடையவன், சுறுசுறுப்பானவர்கள், மரியாதையுடன் நடப்பவர்கள், தற்புகழ்ச்சி உடையவர்கள், பிறரை மட்டம் தட்ட ஆசைப்படுவார்கள், சதைப்பற்றுமிக்கவன், அரக்கக் குணம் கொண்டவன், கோபக்காரன், கொஞ்சம் பொய் பேசுவான் கவர்ச்சியானவன், ஒழுக்கம் குறைவு, பெண்களை கவர்பவன், அன்பு கொண்டவன், முன் யோசனையாளி, நியாவழக்கு தொடுப்பான், தாய்நாட்டை மறக்காதவர்கள், சுய சிந்தனையோடு அதிகம் உண்டு, அபார நினைவாற்றல் இருக்கும், மகிழ்ச்சியானவர். முன்கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும், சகோதர உறவுகளில் சச்சரவு உடையவர்,  கல்வியில் தடங்கல் உடையவர். 

மேல்கூறியவை அனைத்தும் பொது பலன்கள். இவற்றின் செயல்பாடுகள் நட்சத்திர சாரம், லக்கினாதிபதி, நட்சத்திர சாரதிபதி நிலை, கிரக சேர்க்கை, பார்வை கொண்டு ஜாதகரின் செயல் மற்றும் குணம் மாறுபடும். 

குருவே சரணம்  

- ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி : 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT