செய்திகள்

நல்லவர் தீயவர் போலவும் தீயவர் நல்லவர் போலவும்! தர்மனுக்கு பீஷ்மர் சொன்ன நீதிக்கதை!!

தினமணி

அம்பு படுக்கையிலிருக்கும் பீஷ்மரிடம் தர்மன் பல நீதிகளை கற்றுக் கொள்கிறான். அவன் கேட்கும் மிக முக்கியமான ஐயம்..
 
"சில நேரங்களில் நல்லவர் தீயவர் போலவும் தீயவர் நல்லவர் போலவும் காட்சி அளிக்கிறார்கள். அப்படியான தருணத்திலே அவர்களின் தன்மையினை எப்படி அறிந்து கொள்வது”
 
இதற்கு ஒரு நரி, புலியின் கதையினை சொல்கிறார்.
 
“புரிகன் என்ற அரசன் மக்களைக் கொடுமை செய்து அரசாண்டதால் மறு பிறவியிலே ஒரு நரியாகப் பிறந்தான்.
 
தெய்வ அருளால் அந்த நரி தன் முற்பிறப்பின் நிலையினை அறிந்தது. இப்பிறப்பிலே நல்ல வாழ்வு வாழ வேண்டும் என நினைத்து, நரியின் இயற்கை குணமான மாமிச குணத்தைக் கூட விட்டுக் காய், கனிகளைத் தின்று வாழ்ந்து வந்தது.
 
காட்டிலே இல்லாமல் மயானத்திலே வாழ்ந்தது. இந்த நரியினை மற்ற நரிகள் பொறாமையுடன் பார்த்தன. ஒரு நரி இப்படி மாமிசம் உண்ணாமல் இருப்பது இயற்கைக்கு முரணானது எனச் சொல்லி அந்த நரியின் உறுதியினைக் குலைக்க மற்ற நரிகள் முயன்றன. ஆனால் அந்த நரி மசியவில்லை.
 
ஒரு நரி இப்படி வாழ்வதை அந்த காட்டரசின் ராஜாவான புலி கேள்விப்பட்டது. புலி அப்படியான நரியினை தனது அமைச்சராக்கலாம் என நினைத்து அந்த நரியினை வரவழைத்தது.
 
புலியின் பேச்சைக் கேட்ட நரி நிதானமாகப் பதிலளித்தது..
 
"உங்களின் அரச போகங்களைக் கண்டு எனக்கு மயக்கமோ ஈடுபாடோ உண்டாகவில்லை. என்னுடைய குணத்தை அறிந்து நீங்கள் என்னை மந்திரியாக்க அழைத்தாகச் சொன்னீர்கள். என்னுடைய குணம் இங்கே ஏற்கனவே பதவியிலிருப்பவர்களுடன் ஒத்துப்போகாது. 
 
அதனால் நிறைய பிரச்னைகள் தோன்றும். ஆதலால் உங்களிடம் மந்திரியாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை.
 
புலிக்கு நரியை விட மனமில்லை.நரியின் குணத்திற்கு தகுந்தபடியே தான் ஆட்சி செய்வதாகவும் ஏற்கனவே பதவியிலிருப்பவர்களால் நரிக்கு எந்த சிரமும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும் உத்தரவாதம் தந்து நரியை சம்மதிக்க வைத்துவிட்டது புலி.
 
நரியும் சுலபத்தில் சம்மதிக்கவில்லை. நிறைய நிர்ப்பந்தங்களைச் சொன்னது.
 
"இதோ பாருங்கள் புலி ராசா. நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்..
 
நான் ஆலோசனைகளை உங்களுக்குத் தனிமையில் தான் சொல்வேன். அதை நீங்கள் என்னைச் சபையிலே சொல்ல வற்புறுத்தக் கூடாது.
 
என் மீது நீங்கள் ஒரு போதும் நம்பிக்கை இழக்கக் கூடாது. இங்கே ஏற்கனவே பதவியில் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு நீங்கள் என்மீது எந்த அபிப்ராயம் கொள்ளக் கூடாது. அதன் வழி என் மீது எந்தக் குற்றமும் சுமத்தக்கூடாது.
 
நான் ஆலோசனை சொல்லும் போது சில ஆலோசனைகள் எச்சரிக்கை போலத் தோன்றும். அதன் காரணமாக நீங்கள் யாரையும் துன்புறுத்தக் கூடாது”
 
இத்தனை நிர்ப்பந்தத்தையும் புலி ராசா ஒப்புக் கொண்டார். நரியின் செயல்பாடுகள் மிகத் திருப்தியாக இருந்தன. ஏற்கனவே பதவியிலிருந்தவர்கள் செய்த மோசடிகள் முறியடிக்கப்பட்டன. அவர்கள் மேற்கொண்டு மோசடிகள் செய்ய முடியவில்லை. நரியின் செல்வாக்கு அதிகமானது. ஏற்கனவே பதவியிலிருந்து சுகமனுபவித்து வந்தவர்களுக்கு நரியின் நேர்மையான செயல்பாடு பெரும் எரிச்சலை உண்டு செய்தது. 
 
புலி ராசா நரியினை முழுமையாக நம்பினார். அதனால் அவை நரியை ஒழிக்க ஒரு திட்டம் தீட்டின..
 
புலி அரசனுக்கு எனத் தயாரிக்கப்பட்ட விசேஷ விருந்து உணவினை ரகசியமாகக் கிளப்பிக் கொண்டு போய் அந்த நரியின் வீட்டிலே போட்டு விட்டன அப்படி திட்டம் தீட்டிய விலங்குகள். அப்படியே செய்தும் விட்டன.
 
இது அந்த நரிக்குத் தெரிந்தும் சும்மா இருந்து விட்டது; காரணம் புலி அரசனுக்கு தான் விதித்த நிபந்தனைகளை அவன் கடைப்பிடிக்கிறானா என அறிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததாக நினைத்தது நரி.
 
தனக்காகத் தயாரிக்கப்பட்ட விசேஷ உணவு களவு போனதாகவும் அது அந்த நரியின் வீட்டில் இருப்பதாகவும் தகவலை புலி அரசன் பெற்றான். அதனை சோதித்தும் அறிந்தான். அவனுக்கு பெரும் கோபம் வந்தது. அந்த நரியினை கடுமையாகத் தண்டிக்க முடிவு செய்து கர்ஜனை செய்தான்.
 
புலியின் தாயார் புலி தன் மகனுக்குப் புத்திமதி சொன்னது. “இதோ பாரப்பா நீயாக மனம் உவந்து தந்த பரிசுகளையெல்லாம் அந்த நரி இதுவரை ஏற்றுக் கொண்டது இல்லை. அவையெல்லாம் மிக விலை உயர்ந்த பரிசுகள். அப்படிப்பட்ட நரி அரசனான உனக்காகத் தயாரிக்கப்பட்ட உணவைக் களவு செய்து இருப்பான் என நினைப்பது மடமை.
 
அரசனாகிய உனக்கு இன்னும் சற்று பொறுமை வேண்டும். இது அந்த நரியின் மீது பொறாமை கொண்டவர்கள் செய்த செயலாக இருக்க வேண்டும். நல்ல ஆலோசனை கூற நீ அந்த நரியினை அமைச்சராக்கிய உடன் அந்த நரி சம்மதிக்கவில்லை.
 
அது வெகு நேரம் யோசித்தது. பின்னர் உனது வற்புறுத்தலின் பேரில் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அது சம்மதித்தது.”
 
இப்படி தாய்ப்புலி மகன் புலிக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டு இருக்கும் வேளையில் புலி அரசனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சேவகன் ஒருவன் இது பொறாமை கொண்ட பிறர் செய்த சதி தான் என்பதைச் சாமர்த்தியமாகக் கண்டுபிடித்து புலி அரசனிடம் தெரிவித்தான்.
 
நரியினை அவசரப்பட்டு சந்தேகித்த தனது மடத்தனத்தை நினைத்து புலி ராசா ரொம்பவே வருந்தினான். அந்த நரியினை வரவழைத்து மன்னிப்பு கேட்டது.
 
ஆனால், அந்த நரி இந்த சம்பவத்தை ஒரு அவமானமாகக் கருதி தான் உயிர் விடத் தீர்மானித்திருப்பதாக சொன்னது. புலி அதிர்ச்சி அடைந்தது முடிவை மாற்றிக்கொள்ள மன்றாடியது.
 
நரி சொன்னது, புலி ராசாவே நல்லவர் தீயவர் போலவும் தீயவர் நல்லவர் போலவும் தோன்றுவது இயற்கை. 
 
ஒரு அரசன் இதனை நல்ல ஆலோசனையின் மூலமும் அவசரப்படாத சிந்தனை மூலமுமே தீர்க்க இயலும்.
 
என் மரணம் அதனை உனக்கு சொல்லட்டும்” எனச் சொல்லி உயிரை விட்டது.
 
பாரதத்திலே தர்மன் பலரிடம் ஆலோசனை கேட்பதாக சம்பவங்கள் வருவதைக் காணலாம். அது தர்மம் எது என அவர் கேட்கும் கேள்விகளுக்கு பலர் விடை சொல்லுகின்றனர். 
 
ஏன் தர்மர் இப்படி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்பதைக் கவனிக்கையில் சரியானது எது எனத் தெரிந்து கொள்வதில் அவருக்கு இருந்த முனைப்பு என்றே நினைக்கத் தோன்றுகிறது.
 
*ஆன்மீக வாழ்க்கைக்குப் புராணங்கள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!* 

- கோவை பாலகிருஷ்ணன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT