செய்திகள்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

தினமணி

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்காஞ்சிபுரம், மே 23: வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் திருத்தேர் உற்சவம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதனால், காஞ்சிபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டது. 
பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் முக்கிய திவ்யதேசமாக காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜ சுவாமி எனும் வரதராஜப்பெருமாள் கோயில் விளங்கி வருகிறது. இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ  பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 17 ஆம் தேதி வைகாசி பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, பகல், இரவு என சிம்ம, ஹம்ச, யாளி, சூரியப் பிரபை, சந்திரப்பிரபை, யானை, சேஷன் உள்ளிட்ட வாகனங்களில் வரதர் திருவீதியுலா நடைபெற்றது. விழாவின் 3-ஆம் நாளான கருடசேவை உற்சவம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில், அதிகாலை 4 முதல் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பாசுரங்கள் முழங்க கருட வாகனத்தில் வரதர் எழுந்தருளினார். தொடர்ந்து,  நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தார். இதையடுத்து, ஹனுமந்த வாகனம், தங்க சப்பரம், தங்கப் பல்லக்கு, கோபுர தரிசன உற்சவங்கள் நடைபெற்றன. விழாவின் 6-ஆம் நாளான புதன்கிழமை மாலை வரதர் யானை வாகனத்தில் பவனி வந்தார். 
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வியாழக்கிழமை (மே 23) நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் தாயாருடன் வரதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு, பாசுரங்கள் முழங்க தேரில் அமர்த்தப்பட்டார். தொடர்ந்து, திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது, காந்தி சாலை, காமராஜர் சாலை, நெல்லுக்காரத் தெரு, செங்கழுநீரோடை வீதி, பூக்கடைச் சத்திரம், பேருந்து நிலையம் உள்ளிட்ட ராஜவீதிகளின் இரு புறமும் திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டனர். மேலும், தொலைவில் இருந்தபடியே உற்சவரை நோக்கி பக்தர்கள் தேங்காய், பழம், கற்பூரம் கொண்டு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். பக்தர்களுக்காக, பல்வேறு தொண்டு அமைப்பினர், ஆர்வலர்கள், கட்சியினர் ஆங்காங்கே நின்று நீர், மோர், அன்னதானம் செய்தனர். விழாவையொட்டி, டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் பாலுசெட்டிசத்திரம், விஷ்ணுகாஞ்சி, சிவகாஞ்சி உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT