செய்திகள்

மனிதன் செய்யக்கூடாதது இரண்டு அதென்ன?

DIN

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்" என்பதன் மூலம் மிக அறிய உண்மைகளை நமக்கு திருவாசகத்தில் மாணிக்கவாசகர் புலப்படுத்தியிருக்கிறார்.

மனிதன் செய்யக்கூடாதது இரண்டு. ஒன்று இகழ்ச்சி மற்றது புகழ்ச்சி

எப்போது மற்றவரை இகழ்கிறோமோ அப்போது வெறுப்புணர்ச்சி என்பது மனதில் தோன்றும். வெறுப்பை வேரறுக்காது போனால் ஒன்றிலிருந்து ஒன்றாக வளர்ந்து கொண்டே செல்லும். இறுதியில் மனதை மொத்தமும் ஆக்கிரமித்து வாழ்க்கையின் மீதே வெறுப்பை உண்டாக்கும். எவரின் மீது வெறுப்பை உமிழ்கிறோமோ பிறகு எப்போதும் அவரின் நினைவிலேயே இருக்க வேண்டிவரும். 

நாம் புராணங்களில் நிறைய உதாரணங்களைக் கண்டிருக்கிறோம் அல்லவா? இறைவனை நேசிப்பவர்களைக் காட்டிலும் வெறுத்தவர்கள் விரைவில் முக்தியை அடைந்திருக்கின்றனர். காரணம் வெறுப்பு என்ற பெயரில் எப்போதும் இறைவன் நினைவில் இருந்ததால் நற்கதியை அடைந்தனர்.

இகழ்ச்சி கூடாது என்பது சரி. ஆனால் புகழ்ச்சி என்பதும் தவறா என்று கேட்டால். 

வரம்புக்குள் இருக்கும் வரை இல்லை என்று கூறலாம்.

"நேசரைக் காணாவிடத்து நெஞ்சாரவே புகழ்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே -வாச
மனையாளைப் பஞ்சனையின் மேல்
மைந்தர் தமை நெஞ்சில்
வினையாளை வேலை முடிவில்"

என்று புகழுவதற்கு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதனை மீறும் போது இகழ்சியை விட புகழ்ச்சி அதிக பாதிப்புகளை உருவாக்குகிறது. புகழ்ச்சி என்பது இரண்டு பக்கமும் கூரான கத்தி. புகழ்ச்சி என்னும் போதைக்கு மயங்காதவர்களைப் பார்ப்பது கடினம். புகழ்ச்சியை அடுத்தவர் விரும்புவதைக் கண்டவுடன் இன்னும் எப்படி எல்லாம் புகழாலாம் என்று மனம் எண்ண ஆரம்பிக்கும். 

புகழ்ச்சிக்குப் பொய் அழகு என்று சமாதானம் சொல்லும். பொய்மையான புகழ்ச்சியும் வெற்று அகங்காரம் மட்டுமே அங்கு மிச்சமிருக்கும். அப்போது பொய் கெட்டு மெய் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?. 

மனிதரைப் புகழ்வதை விடுத்து இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும். இறைவனைப் போற்றிப் புகழ்வதென்றால் எப்படி?. 

இறைவனின் அழகைப் பாட வேண்டுமா? இறைவனின் வடிவைப் பேச வேண்டுமா? இல்லை.

மாணிக்கவாசகர் சொல்வது இதை அல்ல. இதற்கு முதல் அடியையும் சேர்த்துப் பாருங்கள் "ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்"

இறைவா என்னால் இந்த பிறவிப் பிணியை தாங்க இயலவில்லை என்று கூறி ஓ வென்று கதறுவதையே போற்றி புகழ்தல் என்கிறார்.

ஒரு மருத்துவரை சிறந்தவர் என்று போற்றினால் என்ன அடையாளம்? 

மருத்துவரிடம் போய் பலர் நோய்களை கூறி நிவாரணம் அடைந்தனர் என்று தானே அர்த்தம். அதே போல பிறவி எனும் பிணியைத் தீர்ப்பவர் என்று ஈசனை போற்றி புகழ்தல் எவ்வாறு? ஈசனிடம் சரணடைந்து நமது குறைகளை கூறி கதறுவது ஒன்று தானே வழி?. 

நான் என்ற அகந்தையை விடுத்தால் நமது குறைகள் கண்களுக்குத் தெரியும். இறைவனை சரணடைந்து ஓ என்று கதறத் தோன்றும். இதனால் நமக்குள் இருக்கும் பொய்மையாகிய அறியாமை அகலும். மெய் ஞானம் சித்திக்கும். 

சிவன் மீட்டு வந்து வினை பிறவி அறுப்பார். போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்!!

ஓம் நமச்சிவாய..

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்" 

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்" 

- கோவை ச.பாலகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT