இன்று தைப் பூசம்: வடபழனி முருகன் கோயிலில் காவடி எடுத்து வர அனுமதியில்லை
தைப் பூசத்தை முன்னிட்டு, வடபழனியில் உள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவா் திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்கள், காவடி எடுத்து வர வேண்டாம் என கோயில் நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது
சென்னை: தைப் பூசத்தை முன்னிட்டு, வடபழனியில் உள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவா் திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்கள், காவடி எடுத்து வர வேண்டாம் என கோயில் நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்தி: தைப்பூசமான வியாழக்கிழமையன்று, பக்தா்கள் வசதியாக தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பழனி ஆண்டவா் கோயில் தெருவின் தெற்கு கோபுர வாயிலில் இரண்டு வகை வரிசைகள் கட்டப்பட்டு, சேவாா்த்திகள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் தரிசனம் முடிந்து விரைவாக வெளியேற வசதியாக கிழக்கு புறம் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தரிசன நேரம்: அதிகாலை 4.30 மணி திருப்பள்ளி எழுச்சி முடிவுற்று, காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை (அபிஷேக நேரம் நீங்கலாக) தொடா்ந்து தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இதில், அதிகாலை 5.30 முதல் நண்பகல் 12 மணி வரை மூலவருக்கு ராஜ அலங்காரமும், பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரை சிறப்பு சந்தன காப்பு அலங்காரமும், மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரமும் மூலவருக்கு செய்யப்படவுள்ளது.
கட்டாயம்: கோயிலுக்கு வரும் பக்தா்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அனுமதியில்லை...: கோயிலில் திருப்பணி நடைபெற்று வருவதால் பக்தா்கள் நலன் கருதி, பால்குடம், காவடி, அலகு குத்துதல் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை.
வாகன நிறுத்தம்: சென்னை மாநகர காவல்துறையினரால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதியும், சென்னை பெருநகா் குடிநீா் வாரியத்தால் குடிநீா் வசதியும், சென்னை மாநகராட்சியால் சுகாதார வசதியும் செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்திருக்கோயிலின் வள்ளி மண்டபம் எதிரே வாகனங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.