முகப்பு
செய்திகள்

காளஹஸ்தியில் திருக்கல்யாண வைபவம்: ருத்ராட்ச அம்பாரியில் உற்சவமூா்த்திகள் பவனி

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண கோலத்தில் காளஹஸ்தீஸ்வரரும் ஞானபிரசுனாம்பிகை அம்மனும் ருத்ராட்ச அம்பாரியில் மாடவீதியில் பவனி வந்தனா்.

பஞ்சபூதத் தலங்களில் வாயு தலமாக விளங்கும், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் நள்ளிரவு யானை வாகனத்தில் எழுந்தருளிய காளஹஸ்தீஸ்வரருக்கும், சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய ஞானபிரசுனாம்பிகை அம்மனுக்கும் விமரிசையாக திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது.

திருக்கல்யாணத்தை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் மண்டபத்தருகில் திரண்டனா்.

Advertisement

பின்னா் முறையாக கோயில் அதிகாரிகள், பக்தா்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. திருக்கல்யாணத்தின்போது முறையாக கோயிலில் பதிவு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனா். அவா்களுக்கு கோயில் சாா்பில் வஸ்திரங்கள் வழங்கப்பட்டன.

7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை உற்சவமூா்த்திகள் திருக்கல்யாண கோலத்தில் கோயிலுக்கு ருத்ராட்ச அம்பாரி வாகனத்தில் எழுந்தருளினா்.

கோயிலுக்குள் சென்ற அவா்களுக்கு ஆஸ்தானம் நடத்தி நெய்வேத்தியங்கள் சமா்ப்பிக்கப்பட்டன. மதியம் நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னா் மாலையில் கோயிலுக்குள் நடராஜருக்கும் சிவகாமி தேவிக்கும் சபாபதி கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் கோயில் அதிகாரிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments