முகப்பு
செய்திகள்

சூரமத்பனை வதம் செய்தார் ஜெயந்திநாதர்!

திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட மக்கள் வெள்ளத்தில் சூரமத்பனின் வதம் நடைபெற்றது.

Updated On : 7 நவம்பர், 2024 at 12:45 PM
சூரபத்மனை வதம் செய்யும் காட்சி
பகிர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நவம்பர் 2-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிய நிலையில், ஆறாம் நாளின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

இன்று காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு ஹோமங்கள் நடைபெற்றன. சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவரான சுப்பிரமணியருக்கு சஷ்டி சிறப்பு தீபாராதனையும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் இருந்த ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி, சுவாமி அம்பாளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் வந்தார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர், சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்துக்கு வந்து, அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சர்வ அலங்காரமாகி மாலை 5.30 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சூரசம்ஹாரத்துக்குப் புறப்பட்டார். முன்னதாக, சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக் கோயிலான சிவன் கோயிலிலிருந்து புறப்பட்டு உள், வெளி மாடவீதிகள் மற்றும் ரதவீதிகள், சந்நிதித் தெரு வழியாக கோயில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்.

சூரன்பத்மனை வதம் செய்த முருகன்

மாலை 5.05 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதற்கு பின், 5.10 மணிக்கு ஆணவம் அடங்காத சூரபத்மன் சிங்கமுகமெடுத்து அமைதியின் திருவுருவமான முருகப்பெருமானை மூன்று முறை சுற்றி வந்து போர் புரிந்தார். முருகன் தனது வேலால் சிங்கமுக சூரனை வதம் செய்தார்.

இறுதியாக 5.20 மணிக்கு சூரபத்மன் தனது சுயரூபத்துடன் போர் புரிய வந்தார். அவரை முருகப்பெருமான் வதம் செய்தார். அதன்பிறகும் ஆணவம் அடங்காத சூரபத்மன் கடைசியாக மாலை 5.35 மணிக்கு மாமரமாக உருவெடுத்து மீண்டும் போருக்கு வந்து, சூரபத்மனின் ஆணவத்தை ஆட்கொண்டு அவரை சேவலாகவும், மயிலாகவும் உருமாறச் செய்து அவரை சூரசம்ஹாரம் செய்தார்.

அரோகரா கோஷத்தில் முருகப்பெருமான்

ஒவ்வொரு முறையும் முருகப்பெருமான் சூரபத்மனிடம் போர் புரியும் போது வானில் கருடன் வட்டமிட்டதைக் கண்ட பக்தர்கள், பக்திப் பரவசத்தில் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற பரவசம் பொங்க கோஷம் எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர்.

முருகப்பெருமானின் வருகையை எதிர்பார்த்து கடற்கரையில் காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானைக் கண்டதும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று வெற்றி முழக்கத்துடன் வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.