ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றம்!
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி பிரமோற்சவ பெருவிழா..
தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் புரட்டாசி பிரமோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான ஸ்ரீ பூமிதேவியுடன் ஒரே சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதாகும், இங்கு மூலவர் பெருமாளுக்கு உப்பு இன்றியே நிவேதனம் செய்யப்படுகிறது தமிழகத்தில் வேறு எந்த வைணத்தலங்களில் இல்லாத வகையில் இங்கு மட்டுமே துலாபாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டுதோறும் புரட்டாசி பிரமோற்சவம் 10 நாள்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா உற்சவர் பெருமாள், பூமிதேவி தாயாருடன் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருள, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, ஸ்ரீ கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடி சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் கொடிமரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கும், பெருமாளுக்கும், தாயாருக்கும் தீபாராதனை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் தொடக்கமாகத் தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 4 ஆம் திருநாள் கருட வாகனத்தில் வீதியுலாவும் 9ஆம் நாளான வருகிற 12ஆம் தேதி சனிக்கிழமை ரதா ரோஹணம் தொடர்ந்து காவிரியில் தீர்த்தவாரியுடன் இவ்வாண்டிற்கான புரட்டாசி பிரமோற்சவம் பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.