செய்திகள்

பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

கோவை பேரூர் படித்துறையில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை பேரூர் படித்துறையில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

ஆடி அமாவாசை இந்துக்களுக்கு மிகவும் புனிதமும், சிறப்பான நாளாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை "ஆடி அமாவாசை விரதம்" எனச் சிறப்பு பெறுகின்றது. ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து படையலிட்டு வணங்குவதற்கு உகந்த நாளாகும். பொதுவாக ஒரு வருடத்திற்கு 96 முறை முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு உள்ளது. அப்படி செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு மாதமும் வரக் கூடிய அமாவாசையில் செய்யலாம். அன்று பித்ருலோகத்தில் இருந்து தேடி வரும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பதே சாஸ்திரம் சொல்ல கூடிய விதியாகும்.

வருடத்தில் முக்கியமான மூன்று அமாவாசையில் அதாவது, ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய நாள்களில் திதி தர்ப்பணம் கொடுப்பது நல்ல பலனை தரும். முதலில் வரக்கூடிய அமாவாசை, ஆடி அமாவாசையாகும். ஆகவே ஆடி அமாவாசை சிறப்பு பெறுகிறது. கோவை பேரூரில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் புரோகிதர்களை கொண்டு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் படித்துறையில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் ரூ. 15 கோடி மதிப்பில் தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, கட்டி முடிக்கப்பட்ட தர்ப்பண மண்டபம் அரசிடம் ஒப்படைத்தனர். கடந்த சில ஆண்டுகளாக நொய்யல் ஆற்றங்கரை ஓரம் அருகே உள்ள தோட்டத்தில் தர்ப்பணம் செய்து வந்த நிலையில், தற்பொழுது புதிய தர்ப்பணம் மண்டபத்தில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அதன்படி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நொய்யல் ஆற்றங்கரையில் குவியத் தொடங்கினர்.

நேரம் ஆக, ஆக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆற்றங்கரையில் ஓரத்தில் உள்ள புதிய தர்ப்பணம் மண்டபத்தில் தயார் நிலையில் இருந்த புரோகிதர்களை கொண்டு பக்தர்கள், முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் தர்ப்பை புல், காய்கறி, அரிசி, எள், சாதம் உள்ளிட்டவற்றைகளை படைத்து பூஜை செய்தனர். பின்னர் அவற்றை எடுத்துச் சென்று ஆற்றில் போட்டு மூதாதையரை வணங்கினர்.

தொடர்ந்து இலையில் சூடம் ஏற்றி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.அதன்பின் ஆற்றங்கரையில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று விநாயகரையும், சப்த கன்னியரையும் வணங்கினர். அங்கு இருந்து பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் நொய்யல் ஆற்றங்கரை மற்றும் பேரூர் கோயில் முன்பு இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. ஏராளமான வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக நொய்யல் ஆற்றங்கரைக்கு செல்கின்ற வாகனங்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் சாலையின் ஓரத்தில் வாகனங்களை விற்பது மக்கள் நிறுத்திச் செல்கின்றனர். மேலும் கூட்டம் அலைமோதுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்லம்... அனைரா குப்தா!

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

21 வயதில் கேப்டன்..! இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு ‘ஜாக்பாட்’.!

பவர்ஹவுஸ்! ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT