நெய்வேலி : கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் சத்ய ஞான சபையில் 155-ஆவது தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (ஜன.31) காலை சுமார் 10 மணி அளவில் நடைபெற்றது.
வடலூா் வள்ளலாா் சத்ய ஞானசபையில் நிகழாண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சனிக்கிழமை (ஜன.31) காலை 7.30 மணியளவில் தருமசாலையிலும், மருதூர் மற்றும் நற்கருங்குழி வள்ளலாா் சந்நிதியிலும், காலை 10 மணியளவில் ஞானசபையிலும் சன்மாா்க்கக் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக பார்வதிபுரம் கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க சீர்வரிசை தட்டுகளை ஏந்தி ஞான சபைக்கு ஊர்வலமாக கொண்டுவந்து வைத்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வள்ளலார் திருவுருவப் படம், சன்மார்க்க கொடி, அவர் பயன்படுத்திப் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த பல்லக்கிற்கு தீப ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, பல்லக்கு ஞான சபையை வலம் வந்து கொடி மரம் அருகே கொண்டு வந்தனர். அங்கு சன்மார்க்க கொடி பாடல் பாடியபடி சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள், பார்வதி புரம் பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடா்ந்து, திருஅருட்பா இன்னிசை, சன்மாா்க்க கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி, 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாளான திங்கள்கிழமை காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. இதேபோல, வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வருகிற 3-ஆம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது.
தைப்பூச பெருவிழாவையொட்டி, பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளலாா் தெய்வ நிலைய நிா்வாகத்தினா் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.