அரசியல் உத்தமர்களுக்கு

சோதனை மேல் சோதனை: தமிழகத்தில் தொடரும் பரபரப்பு

திருமலை சோமு

தனி மனித வாழ்விலும் சரி ஒரு நாட்டிலும் சரி மாற்றம் என்பது எதிர்பாராமல் நிகழ்ந்து விடும். அப்படி எதிர்பாராமல் நிகழ்ந்த ஒரு மரணம் தமிழகத்தை எந்த அளவுக்கு புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின் தமிழகம் சந்தித்து வரும் போராட்டங்கள், அரசியல் கள நிலவரங்கள் எல்லாம் அசாதாரண சூழ்நிலையில் இருப்பதகாவே பார்க்கப்படுகிறது. இது உண்மையில் யாருக்கான சோதனை காலம் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சந்தித்த தமிழகம் இன்று வரை பலவேறு பிரச்னைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதையே பார்க்க முடிகிறது. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களின் மதிப்பிழப்பின் போது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கையில் தொழிலதிபரான சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் அதில் 136 கோடி ரூபாய் அளவுக்குப் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் 34 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டாக கிடைத்தது. மேலும் 177 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளும் கிடைத்தன.  

இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த பரபரப்பை அடுத்து கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்காக சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தன்னெழுச்சியான இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக ஜல்லிக்கட்டு தடையை நீக்கும் வகையில் தமிழக அரசால் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 

பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து நெடுவாசல் கிராமத்தை மையமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனை தொடர்ந்து மத்திய , மாநில அரசை சார்ந்தவர் மக்களின் விருப்பம் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேற்றப்படாது என்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிரான போராட்டம் தற்காலிகாமாக நிறுத்தப்படுவதாக மக்கள் அறிவித்தனர். 

அந்த போராட்ட அலையை தொடந்து வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 29- வது நாளாக தமிழக விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை கண்டு கொள்ளாத மாநில அரசோ ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றியை அறுவடை செய்ய பணத்தை விதைக்க தொடங்கியது. மத்திய அரசோ மாற்றன் தோட்டத்தை மாடு மேய்ந்தால் என்ன ஆடு மேய்ந்தால் என்ன என்ற மெத்தன போக்கில் இருக்கிறது. 

பிரதமரை சந்திக்க வைப்பதாக 8 விவசாயிகளை அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவர்களிடம் மனுவை மட்டும் பெற்றுக் கொண்டு அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் சென்ற ஒரு நடிகையை சந்திக்க நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு விவசாயிகளை சந்க்க நேரம் ஒதுக்க முடியாதது ஏன் என்று போராட்டக் களத்தில் இருந்து ஒரு குரல் எழுவதை நாம்மால் கேட்க முடிகிறது. ஆனால் பிரதமரின் மனதில் குரல் மட்டும் இந்த ஏழை விவசாயிகளின் செவிகளுக்கு எட்டவில்லை என்பது வருத்தமான ஒன்றுதான். 

இப்படி போராட்டக் களமாக சென்று கொண்டிருக்கும் சூழலில்தான் ஆர்.கே.நகர் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியது. எப்படியும் வென்றுவிடுவோம் என நம்பிக்கையோடு ஒரு கூட்டம் வென்றே ஆக வேண்டும் என்று கங்கனம் கெட்டிக் கொண்டு பணியாற்றிய ஒரு கூட்டம் இதற்கிடையில் தான் காகிதங்களாக பறக்கும் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு சென்றது. 

இதையடுத்து மீண்டும் வருமான வரித்துறையினர் அதிரடியாக களம் இறங்க அ.இ.அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு  சம்மன் அனுப்பியது.  ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில் ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இது ஒருபக்கம் இருக்க இந்த சோதனை வேதனைகளுக்கெல்லாம் பின்னணியில் மத்தியில் ஆளும் பா.ஜ.க இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளன. இந்த சூழலை பயன்படுத்தி எளிதில் கட்சிக்கு அடித்தளம் விடலாம் என்பதுதான் பா.ஜ.க.வின் கணக்கு. இதற்கான வேலைகளை பாஜக கடந்த நவம்பர் மாதமே தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ தமிழத்தில் அரசின் செயல்பாடுகள் சீராக இருப்பதாக தெரியவில்லை. அதற்கு உதாரணம் தான் பல்வேறு போராட்டங்களும், ஆர்ப்பாடங்களும். எந்த போராட்டத்திற்கும் இந்த எடப்பாடி அரசு முறையான நடவடிக்கை எடுக்க வில்லை என்பதே எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: மோடி, ராகுல் முன்னிலை

தபால் வாக்கு எண்ணிக்கை: முன்னிலை நிலவரம்!

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மத்தியில் யாா் ஆட்சி?

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT