தினம் ஒரு திருவாசகம்

பகுதி 28 – வாழாப் பத்து - 5

பாவங்களை அழிப்பவனே, தேவர்களின் தலைவனே, சிவபுரத்தின் அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே

என்.சொக்கன்

இவ்வுலகில் வாழவிரும்பாமல், சிவபெருமானின் திருவடிகளில் சேரவிரும்பும் தன்மையைக் குறிப்பிடும் பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.

173

பாடலின்பம்

பாவநாசா, உன் பாதமேஅல்லால்

பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய்,

தேவர்தம் தேவே, சிவபுரத்துஅரசே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

மூஉலகுஉருவ இருவர்கீழ்மேலாய்

முழங்குஅழலாய் நிமிர்ந்தானே,

மாஉரியானே, வாழ்கிலேன் கண்டாய்,

வருகஎன்று அருள்புரியாயே.

*

பழுதுஇல் தொல்புகழாள் பங்க, நீஅல்லால்

பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய்,

செழுமதி அணிந்தாய், சிவபுரத்துஅரசே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

தொழுவனோ பிறரை, துதிப்பனோ, எனக்குஓர்

துணையென நினைவனோ, சொல்லாய்,

மழவிடையானே, வாழ்கிலேன் கண்டாய்,

வருகஎன்று அருள்புரியாயே.

பொருளின்பம்

பாவங்களை அழிப்பவனே, தேவர்களின் தலைவனே, சிவபுரத்தின் அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, அன்றைக்குத் திருமாலும் பிரம்மனும் உன்னைத் தேடிக் கீழும் மேலுமாகச் செல்லுமாறு, மூன்று உலகங்களையும் ஊடுருவி, ஒலிக்கும் ஜோதிவடிவமாக நிமிர்ந்து நின்றவனே, யானையின் தோலை உடுத்தியவனே, உன்னையன்றி எனக்கு இன்னொரு பற்று இல்லை, அதை நீ அறிவாய்,

சிவபெருமானே, இனியும் இந்த உலகில் நான் வாழமாட்டேன், அது உனக்குத் தெரியும்,  ‘வருக’  என்று என்னை உன்னிடம் அழைத்து அருள்செய்.

*

குற்றமில்லாத, பழமையான புகழை உடைய உமையம்மையைத் தன் உடலில் ஒரு பங்காகக் கொண்டவனே, செழுமையான சந்திரனை அணிந்தவனே, சிவபுரத்தின் அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, உன்னையன்றி எனக்கு இன்னொரு பற்று இல்லை, அதை நீ அறிவாய்,

நான் பிறரை வணங்குவேனா? துதிப்பேனா? எனக்குத் துணை என்று அவர்களை நினைப்பேனா? நீயே சொல்!

இளைய காளையை வாகனமாகக் கொண்டவனே, இனியும் நான் இங்கே வாழமாட்டேன், அது உனக்குத் தெரியும்,  ‘வருக’  என்று என்னை உன்னிடம் அழைத்து அருள்செய்.


சொல்லின்பம்

பாவநாசா: பாவங்களை அழிப்பவனே

மற்றுஇலேன்: வேறு இல்லை

தேவே: தலைவனே

உறை: வசிக்கிற / எழுந்தருளியிருக்கிற

உருவ: ஊடுருவ

முழங்குஅழல்: சத்தமிடும் ஜோதி

மாஉரியானே: யானைத்தோலை அணிந்தவனே

பழுதுஇல் தொல்புகழாள் பங்க: குற்றமில்லாத, பழைய புகழைக் கொண்ட உமையம்மையைத் தன் உடலில் ஒரு பங்காகக் கொண்டவனே / சிவபெருமானே

செழுமதி: செழுமையான சந்திரன்

நினைவனோ: நினைப்பேனா

மழவிடையானே: இளைய காளையை வாகனமாகக் கொண்டவனே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT