நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

செ.குளோரியான்


பாடல் - 7

வந்து தோன்றாய், அன்றேல் உன்
வையம் தாய மலரடிக்கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணிகொள்ளாய்,
செந்தண் கமலக் கண், கை, கால்,
சிவந்த வாய் ஓர் கருநாயிறு
அந்தம் இல்லாக் கதிர்பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே.

எம்பெருமானே, சிவந்த, குளிர்ந்த தாமரையைப்போன்ற திருக்கண்கள், திருக்கைகள், திருக்கால்கள், சிவந்த வாயோடு ஒரு கருத்த சூரியன் முடிவில்லாத கதிர்களைப் பரப்பிக்கொண்டு திகழ்வதைப்போலத் தோன்றும் அம்மானே, எனக்காக இங்கே வந்து தோன்றுவாய், இல்லாவிட்டால், உலகத்தையே தாவி அளந்த உன்னுடைய மலர்த் திருவடிகளின்கீழே நான் வந்து நிற்கும்படி என்னை அழைத்து அடிமையாக்கிக்கொள்வாய்.


பாடல் - 8

ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாள்நாளும்
தொக்க மேகப் பல்குழாங்கள்
காணும்தோறும் தொலைவன் நான்,
தக்க ஐவர் தமக்காய் அன்று
ஈர்ஐம் பதின்மர் தாள் சாயப்
புக்க நல் தேர்த் தனிப்பாகா,
வாராய், இதுவோ பொருத்தமே?

மேகங்கள் திரண்டுவருகிற கூட்டங்களைக் காணும்போதெல்லாம், ‘இவை எம்பெருமானாகிய அம்மானின் உருவத்தைப்போல் உள்ளன’ என்று நான் தினந்தோறும் உள்ளம் குழைவேன், என்னைத் தொலைப்பேன், தகுதியையுடைய ஐந்து பாண்டவர்களுக்காக, நூறு கௌரவர்கள் அழியும்படி நல்ல தேரிலே புகுந்த இணையற்ற பாகனே, (இதைக் கண்டபிறகும்) நீ எனக்கு அருள்செய்ய வரவில்லையே, இது உனக்குப் பொருந்துமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT