நூல் அரங்கம்

தமிழாய்வு சில மயக்கங்கள்

சா. பன்னீர் செல்வம்

தமிழாய்வு சில மயக்கங்கள் - சா.பன்னீர்செல்வம்; பக்.320; ரூ.200; மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108; )044 - 2536 1039.
தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவை குறித்து எழுதப்பட்ட பத்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தொல்காப்பியர் நோக்கில் திசைச்சொல் என்பது என்ன, தமிழில் பேச்சுமொழியே எழுத்துமொழியாகி விடுமா, தமிழில் தன்வினை - பிறவினை பொருள் மரபுகளும் அவற்றிற்கான சொல்லாட்சிகளும் எவ்வாறு அமைகின்றன, தமிழ் கலப்புமொழி ஆகாமல் காப்பதெப்படி, வள்ளுவர் கொல்லாமையை முதலாவதாகவும் பொய்யாமையை இரண்டாவதாகவும் கூறியது சரியா - இப்படிப்பட்ட ஆழமான செய்திகளை எடுத்துக்கொண்டு அவற்றைப் பல கோணங்களிலும் அலசி ஆய்ந்து அழுத்தந்திருத்தமாகவும் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் விதமாகவும் தனது கருத்துகளை நிறுவியுள்ளார் நூலாசிரியர்.
இத்தொகுப்பிலுள்ள முதல் கட்டுரையான "செந்தமிழா? கொடுந்தமிழா' என்கிற கட்டுரையே, நூலாசிரியரின் ஆழங்காற்பட்ட தமிழ்ப் புலமைக்கும் சமரசமற்ற கொள்கைப்பிடிப்புக்கும் சான்றாகிறது. அக்கட்டுரையில் திசைச்சொல் பற்றிய விளக்கமாக "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்' என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள பன்னிரு நிலங்கள் எவையென்பது குறித்து இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் முதலிய உரையாசிரியர்களிடையேயுள்ள ஒப்புமையையும் வேற்றுமையையும் விளக்கியிருப்பது சிறப்பு.
அதுபோன்றே பிறமொழிச் சொற்கள் தமிழில் எவ்வாறு ஒலிமாற்றி வழங்கப்பட்டன என்பதை கல்வெட்டுத் தமிழ் காலம் (ஆறாம் நூற்றாண்டு) முதல் பாரதியார் காலம் (இருபதாம் நூற்றாண்டு) வரை பட்டியலிட்டிருப்பதும், திருக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் தொழில்கள் (புலவர் தொழில், வேந்தன் தொழில், அஞ்சல் அறிவார் தொழில் போன்றவை) இலக்கணத்தில் எந்த வகையைச் சாரும் என்கிற விளக்கமும் தமிழ் ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாது, ஆய்வாளர்கட்கும் பயன்தரத்தக்கவை.
தமிழறிந்தோர் இந்நூலைப் படிக்கப் படிக்க அவர்கள் மனத்துள் பற்பல கதவுகள் திறக்கும் என்பது உறுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT