மாமனிதர் ம.பொ.சி. - டாக்டர் வி.ஜி.சந்தோசம்; பக்.120; ரூ.100; சந்தனம்மாள் பதிப்பகம், சென்னை-14; 044- 66859999.
'சிலம்புச் செல்வர்' மயிலாப்பூர் பொன்னுச்சாமி சிவஞானம் என்கின்ற ம.பொ.சி.யின் தமிழ்-அரசியல் தொண்டுகளின் தொகுப்பே இந்த நூல்.
அவரைப் பற்றிய அரிய தகவல்களையும் சுருக்கமாகவும், எளிய நடையிலும், சிறப்புற பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
வறுமையால் மூன்றாம் வகுப்பிலேயே கல்வி தடைபட்டு, அச்சுக் கோர்க்கும் தொழிலில் சேர்ந்தபோதுதான் ம.பொ.சி.க்கு தமிழ் இலக்கிய நூல்களின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அதன் மூலம் தமிழில் ஆழங்காற்பட்ட புலமை கண்ட அவர், 18-ஆம் வயதில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இறுதிக்காலம் வரை தமிழ், தமிழர், தமிழ்நாடு என முழங்கி அதற்காகவே தன்னை அர்ப்பணித்தார்.
எல்லைப் போராட்டம், தலைநகராக சென்னையைத் தக்கவைக்கும் போராட்டம் உள்ளிட்ட முக்கிய போராட்டங்களை முன்னெடுத்து பெருமை பெற்றவர். மாநில சுயாட்சியை வலியுறுத்தி முதன் முதலில் மாநாடு நடத்தியவர், பொங்கல் திருநாளை தமிழினத்தின் தேசிய திருநாளாகக் கொண்டாட ஏற்பாடு செய்தவர், அன்றைய சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டக் கோரி முதலில் முழங்கியவர் என அவரது அரும்பணிகள் இளம் தலைமுறையினர் தவறவிடக்கூடாத தகவல்கள்.
சமயம் கடந்த சமுதாய ஒற்றுமைக்கு உதவி புரிந்த இலக்கியம் தமிழில் ஒன்று இருக்கிறது என்றால், அது முதலும் முடிவுமாகச் சிலப்பதிகாரம்தான் என்கிறார் ம.பொ.சி.
தாய்மொழிப் பற்று அருகி வரும் தருணத்தில் தமிழ் மொழிக்காகவே வாழ்ந்த ம.பொ.சி. குறித்த இந்நூல் சிறந்த கொடை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.