பறையர் இன வரலாறு- முனைவர் சு.கிருஷ்ணகுமார்; பக்.160; ரூ.150; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-21; ✆ 93805 30884.
சென்னையில் வசிக்கும் நூலாசிரியரின் சொந்த ஊர் சிலுக்குவார்ப்பட்டி. இவரின் முன்னோர் சித்த வைத்திய பரம்பரையினர். டாக்டர் அப்துல் கலாம் தலைமையில் ஏழாண்டுகள் பணியாற்றி, தற்போது டி.ஆர்.டி.ஓ. எனும் ராணுவ ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிவருகிறார். முப்பத்து ஆறு வயதில் ஒவ்வொரு பிரிவிலும் 25 கல்வி வழி பட்டங்கள் பெற்றிருக்கிறார்.
'அன்றாட பேச்சு வழக்கிலுள்ள கஞ்சி, உறங்கு, சேரி, காய்ச்சல், கண்மாய், முடங்கு, வடக்கிருப்பு, தெற்கிருப்பு போன்ற பழந்தமிழ்ச் சொற்களை பறையர்கள் இன்னமும் எவ்வித கலப்புமின்றி பயன்படுத்தி வருவதில் இருந்து இவர்களே ஆதிக்குடிகள், தமிழர்கள்' என்கிறார் நூலாசிரியர்.
மலையாளம் தமிழ்மொழியில் 'பறை' என்பது 'சொல்' என்ற பொருளையே தரும். அயோத்திதாச பண்டிதரும் பௌத்த தம்மத்தை பறைந்தவர் என்பதால், 'பறையர்' என குறிப்பிடுவதை நூலாசிரியர் மேற்கொள்காட்டுகிறார்.
1851-இல் பெண்களுக்கும், 1852-இல் தாழ்த்தப்பட்டவர்களுக்குமான கல்வி வாய்ப்பை முதன்முதலில் உருவாக்கியவர் ஜோதிபா புலே என்றும், அவரைப் பின்பற்றி கோலாப்பூர் அரசர் தனது சமஸ்தானத்தில் 1902-இல் 50 சதவீதம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்தியதாகவும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். 'தமிழக வரலாற்றில் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற குடிகளே தலைசிறந்த குடிகள் என்று சங்ககாலமே சொல்கிறது'- அதுவே தமிழர்களின் பொற்காலம் என்கிறார்.
பறையர்களுக்கு நிலத்தின் மீது உரிமை இல்லாதுபோன காரணத்தினால்தான் பலகுடிகள் இலங்கை, மோரீஷஸ், தென்ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், பிஜி தீவுகளுக்கு குடிபெயர்ந்தனர் என்றும் வலியுறுத்துகிறார். ஏராளமான தரவுகளை முன்வைத்துள்ள இந்த நூல் ஆராய்ச்சிக்கு ஏற்றது; மற்றவர்களும் வாசிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.