பத்தொன்பதாம் நூற்றாண்டுத் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்-முனைவர் ஆ.மணி; பக்.204; ரூ.200; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி - 605 009. ✆ 94439 27141.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருக்குறளுக்கான மொழிபெயர்ப்புகளை அறிமுகம் செய்யும் ஆய்வு நூலாக எழுதப்பட்டுள்ளது. இந்த நூலில் ஏழு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் கட்டுரையில் 18-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த முதல் மொழிபெயர்ப்பாகிய நேதனியேல் எட்வர்டு கிண்டர்ஸ்லியின் மொழிபெயர்ப்பு முதல் 19-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த 8-ஆம் மொழிபெயர்ப்பான ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு வரை அனைத்து மொழிபெயர்ப்புகளையும் வரலாற்றுப் பார்வையில் அறிமுகம் செய்துள்ளார் நூலாசிரியர்.
இரண்டாவது கட்டுரை அச்சில் வந்த திருக்குறளின் ஆங்கில, பிற மொழிபெயர்ப்பாளர் நே.எ.கிண்டர்ஸ்லி வாழ்க்கை தகவல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. திருக்குறளின் பெருமையை முதல்முதலில் உலகுக்கு உரைத்த முதல் மொழிபெயர்ப்பாளர் இவரே.
மூன்றாம் கட்டுரை எல்லீஸின் திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றியதாகும். திராவிட ஆய்வுகளை முன்னெடுத்த எல்லீசர், திருக்குறள் மீது அளவு கடந்த பற்றும், தீராக்காதலும் கொண்டிருந்தார். ஆட்சியராக இருந்த இவர் உருவாக்கிய திட்டங்களின் அடிக்கல்களில் குறளை எடுத்தாண்டார்.
நூலில் இடம் பெற்றுள்ள நான்காம் கட்டுரை, வி.துறுவின் மொழிபெயர்ப்பை அறிமுகம் செய்து, அதன் சிறப்புகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. அறிஞர் துறு தமிழுக்குச் செய்த அரும்பணிகளை விளக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
ஐந்தாம் கட்டுரை, திருக்குறளின் அனைத்து குறட்பாக்களுக்கும் ஆங்கில பெயர்ப்பைக் கொண்ட ஊ.புஷ்பரதச் செட்டியார் பதிப்பைப் பற்றி அமைந்தது. ஆறாம் கட்டுரை திருக்குறள் காமத்துப்பாலுக்கு வெளிவந்த முதல் மொழிபெயர்ப்பை செய்த ஜான் லாசரின் வாழ்க்கைத் தகவல், பணிகள் இடம் பெற்றுள்ளன. ஏழாம் கட்டுரை, முழுமையான முதல் மொழிபெயர்ப்பாகிய ஜி.யு.போப்பின் ஆங்கில பெயர்ப்பை அறிமுகம் செய்து அதன் சிறப்புகளை உரைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.