தினம் ஒரு தேவாரம்

68.மஞ்சனே மணியும் ஆனாய் - பாடல் 2

என். வெங்கடேஸ்வரன்

   
    நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும்
    ஊன் உகந்து ஓம்பு நாயேன் உள்ளுர ஐவர் நின்றார்
    தான் உகந்தே உகந்த தகவிலாத் தொண்டனேன் நான்
    ஆன் உகந்து ஏறுவானே ஆவடுதுறை உளானே 

விளக்கம்:
முதல் பாடலில், தனது வாழ்நாளின் கடைப் பகுதியில் இறைவனை நினைக்குமாறு, இறைவன் அருள்புரிய வேண்டும் என்று வேண்டிய அப்பர் பிரான், அடுத்த நான்கு பாடல்களில் சிவபிரானை தான் நினைந்து அவனது தொண்டனாகத் திகழ்வதற்கும், சிவபிரானை தான் தியானித்து சிவபிரான் தன்னுடன் ஒட்டி வாழும் நிலையை அடைவதற்கும், ஒன்றிய மனத்துடன் தான் சிவபிரானை நினைப்பதற்கும், பழவினைகள் தன்னை உலகப் பொருட்களின் மீது பாசத்தை ஏற்படுத்தாது இருக்குமாறும், இறைவன் அருள் புரிய வேண்டும் என்று தனது ஏக்கத்தை வெளிப்படுத்துவதை நாம் காணலாம்.

நமது வாழ்நாளின் முந்தைய பகுதியை நாம் சிவபிரானை தியானித்தும், அவனது திருநாமத்தைச் சொல்லியும், கழித்தால்தான், நாம் இறக்கும் சமயத்திலும் இறைவனைப் பற்றிய சிந்தனை நமக்கு ஏற்படும். எனவேதான் முதல் பாடலில் தான் விடுத்த வேண்டுகோள் நிறைவேற தேவையான பக்குவத்தை தான் அடைய வேண்டும் என்று அடுத்த நான்கு பாடல்களில் அப்பர் பிரான் வேண்டுகின்றார்.

அப்பர் பிரானின் வாழ்க்கையை பெரியபுராணத்தின் மூலம் அறியும் நாம், அப்பர் பிரான் எப்போதும் சிவபிரானைப் பற்றிய சிந்தனையுடன் தனது வாழ்க்கையை கழித்தார் என்பதை உணர்வோம். எனவே இந்தப் பதிகத்தின் முதல் ஐந்து பாடல்களும் நமக்கு அப்பர் பிரான் கூறும் அறிவுரைகள் என்று நாம் கருதவேண்டும். 

இந்த பாடலில், ஐம்புலன்களின் வழியே செல்லாமல் உயிர் தான் உய்வதற்கு உண்டான வழிமுறைகள் பின்பற்றமுடியாமல் இருக்கும் தனது பரிதாபமான நிலையை, தனது ஆற்றாமையை இறைவனிடம் எடுத்துச் சொல்லி அவனது அருளை, அப்பர் பிரான் வேண்டுகின்றார். 

பொழிப்புரை:
காளையை வாகனமாக விரும்பி ஏற்ற ஆவடுதுறைப் பெருமானே, அடியேன் மிகவும் விருப்பத்துடன் உன்னை வந்து அடையுமாறு ஆசைப்படுகின்றேன். ஆனால் எனது உடலின் உள்ளே இருக்கும் ஐம்பொறிகளும் என்னுடன் மாறுபட்டு, எனது உடலினை விரும்பி பாதுகாக்கின்றன. அதனால் நானும் எனது உண்மையான விருப்பத்தை மறந்து, ஐம்பொறிகள் விரும்புவதையே விரும்பிச் செயல்பட்டு உனது தொண்டனாக இருக்கும் தன்மையை இழந்துவிட்டேன். நீ தான் அருள் கூர்ந்து, உனது தொண்டனாக நான் இருக்கும் நிலைக்கு என்னை உயர்த்த வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT