தினம் ஒரு தேவாரம்

78. குருகாம் வயிரமாம் - பாடல் 5

என். வெங்கடேஸ்வரன்

பாடல்: 5

    படைத்தானாம் பாரை இடந்தானாகும் பரிசு ஒன்று
                 அறியாமை நின்றான் தானாம்
    உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலால்
                 மூட்டி ஒருக்கி நின்று
    அடைத்தானாம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தானாம்
                 ஆனேறு ஒன்று ஊர்ந்தானாகும்
    கடைத்தானாம் கள்ளம் அறிவார் நெஞ்சில் கண்ணாம்
                 கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

படைத்தான்=உலகைப் படைத்த பிரமன்; இடத்தல்=பெயர்த்தல்; இரண்யாக்ஷன் என்ற அரக்கன், பூமியை கடலின் அடியில் ஒளித்து வைத்தபோது, அந்த உலகத்தை அந்த இடத்திலிருந்து பெயர்த்தெடுத்து மீட்ட திருமால்; பரிசு=தன்மை; ஒருக்கி=ஒருங்கே கூட்டி; கடைத்தான் என்றால் கலக்குபவன் என்று பொருள்.

திரிபுரத்து அரக்கர்கள், வேறு வேறு திசைகளில் பறந்து கொண்டிருந்த தங்களது மூன்று கோட்டைகள், ஒரே நேர்க்கோட்டில் வரும் தருணத்தில் மட்டுமே தங்களை எவரேனும் அழிக்கமுடியும் என்ற வரத்தினைப் பெற்று, அந்த மமதையால் உலகெங்கும் திரிந்து அனைவரையும் துன்புறுத்தி வந்தனர். அவர்களது மூன்று கோட்டைகளையும் ஒரே நேர்க்கோட்டில் வரவழைத்து, தனது சிரிப்பினால் ஒரு சேர அழித்து, அவர்களது ஆதிக்கத்தை உடைத்த வல்லமையாளன் சிவபெருமான். இந்த நிகழ்ச்சி தான் புரங்கள் மூன்றும் ஒள்ளழலால் மூட்டி ஒருக்கி நின்று அடைத்தான் என்று குறிப்பிடப்படுகின்றது.     

பொழிப்புரை:

கருகாவூரில் உறையும் எம்பெருமான், உலகத்தைப் படைத்த பிரமனும், அந்த உலகம் அரக்கன் இரண்யாக்ஷனால் கடலில் ஒளித்து வைக்கப்பட்ட போது மீட்டவனான  திருமாலும், தனது தன்மையை உணராவண்ணம் நெடிய சுடராக நின்றவன் சிவபெருமான்; பகைவர்களாகிய திரிபுரத்து அரக்கர்களது மூன்று கோட்டைகளையும் ஒரே நேர்க்கோட்டில் கூட்டி, அவற்றை எரியூட்டி ஒரு சேர அழித்த வல்லமையாளன்; சூலம் மழு ஆகிய படைகளை உடையவன்; பாம்பினை தனது இடுப்பில் இறுகக் கட்டி, இடப வாகனத்தின் மீதேறி உலகெங்கும் செல்பவன்; வஞ்சனை உடைய மனிதர்களின் மனத்தை கலக்கும் சிவபிரான், தன்னை உணர்ந்துத் தொழும் அடியார்களுக்கு வழிகாட்டியாக உள்ளான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT