தினம் ஒரு தேவாரம்

74. நல்லர் நல்லதோர் - பாடல்  9

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 9:
    வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்
    சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர்
    குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
    சிட்டர் போல் திரு நாகேச்சரவரே

விளக்கம்:
திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளை சுட்டெரித்த பெருமான், தனது அடியார்களின் வினைகளைத் தீர்த்து அவர்களை குளிர்விக்கின்றார் என்று பெருமானின் இருவேறு தன்மைகளை அப்பர் பெருமான் நயமாக குறிக்கின்றார். சிட்டர் என்பது ச்ரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. இந்த பாடல் வேட்களம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலை (5.42.9) ஒத்திருக்கின்றது. குட்ட வல்வினை=குமைக்கும் வல்வினை;

    வட்ட மாமதில் மூன்றுடை வல்லரண்
    சுட்ட கொள்கையர் ஆயினும் சூழ்ந்தவர்
    குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
    சிட்டர் பொற்றிரு வேட்களச் செல்வரே 

உயிர்களை நல்ல கதிக்குச் செல்லவிடாமல், ஐந்து புலன்களின் உதவி கொண்டு உயிர்களை கீழ்மைப் படுத்தியும் சிறுமைப் படுத்தியும், மேலும் பல தீய செயல்களை புரிய வைத்தும், பிறவி எடுத்ததன் நோக்கத்தை உயிர் அறிய முடியாத வண்ணம் செயல்படும் வினைகள், உயிரினை பல துன்பங்களில் ஆழ்த்துகின்றன. மேலும் மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுப்பதற்கு பலமான அடித்தளம் அமைத்து உயிர் நிரந்தரமாக பிறவிச் சுழலில் சிக்கி வெளியே வாராத நிலையை உருவாக்குகின்றன. இவ்வாறு உயிர்களைத் துன்பப்படுத்தும் வினைகளை குட்ட வல்வினைகள், குமைக்கும் வல்வினைகள் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். 

இவ்வாறு நம்மைத் துன்புறுத்தும் தீவினையை கருவூர்த் தேவர், திருமுகத்தலை பதிகத்தின் பாடலில், புழுங்கு தீவினை என்று குறிப்பிடுகின்றார். புழுகுதல், வெம்மையினால் வெந்து போதல்; இந்த தீவினைகளை எதிர்கொண்டு, மெய்ப்பொருளை நாம் உணரும் வண்ணம், அருளாளர்கள் வழங்கிய நூல்கள் தாம் என்று கூறும் கருவூர்த்தேவர், அத்தைகைய நூல்களை நாம் அறியும் வண்ணம் செய்வது இறைவனின் திருவருளாகிய தேன் என்பதையும் இங்கே உணர்த்துகின்றார். எனவே இறைவனின் அருள் இருந்தால் தான் தேவாரம் முதலான நூல்களை படித்து நாம் மெய்ப்பொருளை உணரமுடியும் என்பது இங்கே புலனாகின்றது. எனவே அத்தகைய நூல்களைப் படித்து உண்மையை உணரும் வாய்ப்பினை இறைவன் நமக்கு நல்கவேண்டும் என்று நாம், மனமுருகி இறைவனை வேண்டினால் நமக்கு அந்த வாய்ப்பினை இறைவன் அருளுவான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  
 
புழுங்கு தீவினையேன் வினை கெடப் புகுந்து
            புணர்பொருள் உணர்வு நூல் வகையால் 
வழங்கு தேன் பொழியும் பவளவாய் முக்கண்
            வளரொளி மணி நெடுங்குன்றே
முழங்கு தீம் புனல் வாய்ந்து இளவரால் உகளும்
            முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன்
விழுந்து தீங்கனியாய் இனிய ஆனந்த
            வெள்ளமாய் உள்ளம் ஆயினையே    

பொழிப்புரை:
வட்ட வடிவமாக விளங்கிய மூன்று வலிமையான கோட்டைகளையும் சுட்டெரித்த பெருமான், தன்னைச் சூழ்ந்து இருக்கும் அடியார்களின் திரண்ட வலிமையான பழ வினைகளைத் தீர்த்து அவர்களின் மனதினை குளிர்விக்கும் கருணைச் செயலையும் புரிகின்றார். இத்தகைய மேன்மையான குணங்களை உடைய பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT