தினம் ஒரு தேவாரம்

141. மருந்து வேண்டில் மந்திரங்கள் - பாடல் 10

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 10:

    செருமரு தண்டுவர்த் தேர் அமண் ஆதர்கள்
    உரு மருவப்படாத் தொழும்பர் தம் உரை கொளேல்
    திருமருவும் பொய்கை சூழ்ந்த தேவன் குடி
    அருமருந்து ஆவன அடிகள் வேடங்களே

விளக்கம்:

செரு=நெருங்கி வளர்ந்த, மரு=மருத மரம்; மருத மரத்து இலைகள் துவர் நிற சாயத்தை தயாரிக்க பயன்படுவதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். தேர்=தேரர் என்ற சொல்லின் சுருக்கம், புத்தர்கள் என்று பொருள்; மருவுதல்=நெருங்குதல்; திரு=அழகு; திரு என்ற சொல்லுக்கு திருமகள் என்று பொருள் கொண்டு திருமகள் வீற்றிருக்கும் தாமரை மலர்கள் நிறைந்த பொய்கை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. மற்றவர் நெருங்குவதற்கு தயங்கும் வண்ணம் சமணர்களின் உடல் இருந்தது என்று இங்கே சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார். அந்நாளைய சமணர்கள், காலையில் எழுந்தவுடன் பற்களை துலக்கி சுத்தம் செய்வதை தவிர்த்தனர்; நீராடுவதையும் தவிர்த்து அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று கூறுவார்கள். எனவே உடலும் வாயும் துர்நாற்றத்துடன் விளங்கும் அவர்களை நெருங்க ஏனையோர் தயங்கியது இயற்கை தானே. தொழும்பர்=அடிமைகள், இழிந்தவர்கள்; இங்கே இழிந்தவர்கள் என்ற பொருள் மிகவும் பொருத்தமானது. இந்த தலத்தில் உள்ள திருக்கோயில் மூன்று புறமும் குளத்தால் சூழப்பட்டுள்ள தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. அருமருந்து=கிடைத்தற்கு அரிய மருந்து; பெருமானின் கருணை மற்றும் அவனது சின்னங்களே பிறவிப்பிணியை தீர்க்கும் வல்லமை வாய்ந்தது என்பதால் அரிய மருந்து என்று குறிப்பிடுகின்றார். இங்கே உள்ள அம்பிகையின் திருநாமம், அருமருந்து என்பதையும் குறிப்பால் சம்பந்தர் உணர்த்துகின்றார் என்றும் பொருள் கொள்ளலாம்.       

பொழிப்புரை:

உலகத்தவரே, நெருங்கி வளர்ந்த மருத மரங்களின் இலைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட குளிர்ந்த சாயத்தின் உதவியுடன் நெய்யப்பெற்ற துவராடையை அணிந்த புத்தர்கள் மற்றும், துலக்கப்படாத வாய் மற்றும் நீராடி மாசு கழிக்கப்படாத உடல் ஆகியவற்றைக் கொண்டதால் வீசும் துர்நாற்றத்தின் விளைவாக ஏனையோர் நெருங்குவதற்கு தயங்கும் சமணர்கள் ஆகியோரின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாமல், அவற்றை பொருளற்றவை என்று விலக்கி வாழ்வீர்களாக. திருந்துதேவன்குடி தலத்தில் அழகுடன் விளங்கும் பொய்கையால் மூன்று புறமும் சூழப்பட்ட திருக்கோயிலில் உறையும் பெருமானின் அடையாளங்கள் பிறவிப்பிணியை தீர்க்கும் அரிய மருந்தாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: அமித் ஷா முன்னிலை

கர்னால் இடைத்தேர்தல்: முன்னிலையில் நயாப் சைனி!

பஞ்சாப்: காலிஸ்தான் ஆதரவாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

சென்செக்ஸ் 3500 புள்ளிகள் வீழ்ச்சி! பங்குகளை வாங்கிக் குவிக்கும் முதலீட்டாளர்கள்!

பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

SCROLL FOR NEXT