தினம் ஒரு தேவாரம்

150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 3

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 3:

    மானத் திண் புய வரிசிலைப் பார்த்தனைத் தவம் கெட மதித்து அன்று
    கானத்தே திரி வேடனாய் அமர் செயக் கண்டு அருள் புரிந்தார் பூந்
    தேனைத் தேர்ந்து சேர் வண்டுகள் திரிதரும் சிரபுரத்து உறை எங்கள்
    கோனைக் கும்பிடும் அடியாரைக் கொடுவினை குற்றங்கள் குறுகாவே

விளக்கம்:

மானம்=பெருமை; திண்புயம்=வலிமை மிகுந்த தோள்கள்; வரிசிலை=நாணால் வரிந்து இழுத்துக் கட்டப்பட்ட வில்; பார்த்தன்=அருச்சனின் பெயர்களில் ஒன்று; பிருதை என்பது குந்தியின் மறுபெயர். பிருதையின் புதல்வன் என்பதைக் குறிப்பிடும் வண்ணம், பார்த்தன் என்ற பெயர் அமைந்துள்ளது. அமர்=போர்; தேனைத் தேடும் வண்டுகள் பூஞ்சோலைகளைச் சுற்றித் திரிந்த வண்ணம் இருப்பது போன்று, தெவிட்டாத தேனாக இனிக்கும் பெருமானைச் சுற்றி சிரபுரத்து மக்கள் சூழ்ந்திருப்பார்கள் என்ற பொருள் பட நயமாக அமைந்துள்ளது.
 
பொழிப்புரை:

பெருமை மிகுந்த வலிமையான தோள்களும், நாணினால் வரிந்து இழுத்துக் கட்டப்பட்ட வில்லினையும் உடைய பார்த்தன் தவம் செய்து கொண்டிருந்த காட்டிற்கு, வேடனாக உருவம் தரித்துச் சென்று அவனது தவத்தினை கெடுத்த சிவபெருமான், பார்த்தனது வலிமையை மதித்து அவனுடன் சண்டை செய்து அவனது ஆற்றல் கண்டு மகிழ்ந்து அவனுக்கு பாசுபத அத்திரம் அளித்து அருள் புரிந்தார். இவ்வாறு அருள் புரியும் தன்மையராய், எங்களது தலைவனாக விளங்கும் பெருமான், பூக்களில் உள்ள தேனினைத் தேர்ந்தெடுத்து சேரும் வண்டுகள் திரியும் சோலைகள் கொண்டுள்ள சிரபுரம் தலத்தில் உறைகின்றார். அவரை கும்பிட்டு வணங்கும் அடியார்களை கொடிய வினைகளும் அத்தகைய வினைகளால் ஏற்படும் குற்றங்களும் சென்று அடையா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT