முகப்பு
விளையாட்டு

"இந்தியாவின் கிரிக்கெட் கடவுளுக்கு' ஓய்வு

உலக கிரிக்கெட் ரசிகர்களை 23 ஆண்டுகளாக தன்னுடைய ஆட்டத்தின் மூலம் மகிழ்வித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (39) ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

உலக கிரிக்கெட் ரசிகர்களை 23 ஆண்டுகளாக தன்னுடைய ஆட்டத்தின் மூலம் மகிழ்வித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (39) ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சச்சினின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவருடைய இந்த அறிவிப்பு சரியான நேரத்தில் வந்துள்ளதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் அதிகபட்சமாக ஓர் இன்னிங்ஸில் 76 ரன் மட்டுமே எடுத்தார். அடுத்தடுத்த போட்டிகளில் அவர் தடுமாறி ஆட்டமிழந்த விதம் அவரின் தீவிர ரசிகர்களுக்கு பார்க்க சங்கடமாகத்தான் இருந்தது.

Advertisement

இதனையடுத்து சச்சின் தனது ஓய்வு குறித்து தீவிரமாக சிந்தித்திருக்கக்கூடும். ஏனெனில், கிரிக்கெட் உலகில் சோபிக்க முடியாமல் ஓய்வுபெற்றவர்களும், "பேட்' கூட பிடிக்க தெரியாத பல விமர்சகர்களும் சச்சினை ஓய்வுபெறுமாறு நெருக்கடியும் கொடுத்து வந்தனர். சச்சின் டெண்டுல்கர் என்ற நபர் எவ்வளவு சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்பதை மறந்து அவர் மீது கடும் விமர்சனங்களை பாய்ச்சினர்.

இவற்றையெல்லாம் ஜீரணிப்பது சச்சினுக்கு சற்று கடினமானதாகவே இருந்திருக்க கூடும். மேலும் சச்சினுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து விளையாடிய கங்குலி, திராவிட் ஆகியோர் கூட சச்சின் இப்போது ஓய்வுபெறுவதை விரும்பவில்லை.

இந்திய டெஸ்ட் அணி இப்போது இருக்கும் நிலையில் சச்சின் ஓய்வுபெற்றால், அணிக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று அவர்கள் கருதினர். ஆனால் ஆட்டத்தின்போது பந்து வீச்சாளர்களின் கணிப்பை பொய்யாக்கி பந்தை சிதறடிக்கும் சச்சின், டெஸ்ட் போட்டிகளில் ஓய்வுபெறுவதற்கு பதிலாக ஒரு நாள் போட்டியில் ஓய்வுபெற்று விமர்சகர்களின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தன்னுடைய 23 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கருடன் மேற்கு இந்திய தீவின் பிரையன் லாரா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் ஒப்பிடப்பட்டனர். அண்மையில் ரிக்கி பாண்டிங் தன்னுடைய ஓய்வை அறிவித்தபோது கூட, சச்சின் மீது கடுமையான விமர்சனங்கள் தொடுக்கப்பட்டன. 1989-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானதில் இருந்து பல்வேறு பந்து வீச்சாளர்களையும், பல்வேறு விமர்சனங்களையும் கடந்து வந்தவர்தான் சச்சின்.

பத்தாண்டுக்கு முன்பே அவர் ஒரு தொடரில் சிறப்பாக செயல்படாதபோது ஊடகங்கள் அவரை ஓய்வுபெற அறிவுறுத்தின. ஆனால் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவைபோல் சச்சின் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். தன் மீதான விமர்சனங்களுக்கு எப்போதும் வாய்ச் சவடாலில் பதிலளிக்க பழக்கமில்லாமல், தன்னுடைய சாதனைகளிலும், ஆட்டத்தின் மூலமுமே தொடர்ந்து பதிலளித்து வந்தார் சச்சின். அதேபோல உலகில் எந்தவொரு கிரிக்கெட் வீரரும் சச்சின்போல் அடிக்கடி காயமடைந்து மீண்டும் அணியில் இணைந்து உலகரங்கில் ஜொலித்ததில்லை.

முதுகு தண்டு பிரச்னை, டென்னிஸ் எல்போ காயம், விரல்களில் அடிக்கடி ஏற்படும் காயம் இவற்றையெல்லாம் தாண்டித்தான் தன்னுடைய 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சச்சின்.

1992ஆம் ஆண்டு முகமது அசாருதின் தலைமையிலான உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்த சச்சின், 2012ஆம் ஆண்டு தோனி தலைமையிலான உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

2012ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்திய அணியில் விளையாடிய வீரர்கள் அனைவரும், சச்சினுக்காக உலகக்கோப்பையை வெல்வோம் என்று சபதமிட்டே கோப்பையை வென்றனர். அதேபோல ஒரு நாள் போட்டியில் சச்சின் வைத்துள்ள சாதனைகளை முறியடிப்பதற்கு எந்தவொரு தனி நபர் வீரருக்கும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாகும்.

ஒவ்வொரு சாதனையாளனுக்கு பின்னும், சொல்ல முடியாத எத்தனையோ வேதனைகள், சோதனைகள், அவமானங்கள் புதைந்து இருக்கும். சச்சினை ஒரு சாதனையாளராக கொண்டாடிக் கொண்டிருந்தாலும் அவர் வாழ்வின் ஆரம்ப நாள்களோ மிகவும் சோதனை நிறைந்தாகவே அமைந்திருந்தது. சச்சின் சதமடித்தால் இந்தியா தோற்றுவிடும் என்ற மாயையை ஊடகங்கள் ஏற்படுத்தி வந்தன. ஆனால் இந்திய அணியின் வெற்றியையும், சச்சினின் சாதனைகளையும் ஒப்பிட்டு பார்த்தால் அதுவொரு அப்பட்டமான பொய் என்று புலனாகும்.

சச்சின் ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார். ""நான் ஆடுகளத்திற்குள் நுழையும்போது, நான் தான் முக்கியமானவன் என்று எண்ணிக் கொள்வேன். என் கையில் தான் இந்த ஆட்டம் இருக்கிறது. அணியை தூக்கி நிறுத்த வேண்டியது என் கடமை என்று என்னை நானே தயார் செய்து கொள்வேன்'' என்று கூறினார்.

இந்த நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படும் ஆஸ்திரேலியாவின் சர் டான் பிராட்மேன், சச்சினை தனது வீட்டுக்கு அழைத்து விருந்தளித்து கௌரவப்படுத்தினார்.

சச்சினின் ஆட்டத்தில் என்னுடைய ஆட்டத்தை காண்கிறேன் என புகழ்ந்தார். இது எந்தவொரு ஆஸ்திரேலிய வீரருக்கும் கிடைக்காத பாக்கியம் என்று ஆஸ்திரேலிய ஊடகங்களே புகழ்ந்தன.

1992ஆம் ஆண்டு முதல், ஒருநாள் போட்டிகளை பார்த்து வரும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இனி தனது மனம் கவர்ந்த ஆட்டக்காரரை களத்தில் இனி காண முடியாது. இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை இனி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் காண முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments