முகப்பு
விளையாட்டு

ஏன் இந்த நிர்பந்தம்?

கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ரசிகர்களை மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களையும் தன்னுடைய ஆட்டத்தால் வசப்படுத்திய சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கு புதிய சிக்கல் முளைத்துள்ளது.  டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:34 PM
பகிர்:

கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ரசிகர்களை மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களையும் தன்னுடைய ஆட்டத்தால் வசப்படுத்திய சச்சின் ரமேஷ் டெண்டுல்கருக்கு புதிய சிக்கல் முளைத்துள்ளது.

 டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர்களும், சில ஆங்கில ஊடகங்களும் நெருக்கடி தந்து கொண்டிருக்கின்றன.

 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் இந்திய வீரர்களின் சொதப்பலான ஆட்டம் இதற்குக் காரணம். ஒட்டுமொத்த இந்திய அணியும் தடுமாறிய தருணத்தில் வழக்கம்போல், ஊடகங்களின் மூலம் தங்களது தந்திர ஆட்டத்தை ஆடத் தொடங்கியுள்ளனர் முன்னாள் இந்திய வீரர்கள்.

Advertisement

 உத்வேகம் குறையாத சச்சின்: சச்சினுக்கு 38 வயதாகிவிட்டதைக் காரணம்காட்டி, அவர் ஓய்வுபெற வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்துகின்றனர். சச்சினுக்கு வயதாகிவிட்டதாகக் கூறுபவர்கள், அவரது ஆட்டத்தின் உத்வேகம் பற்றி சற்றும் சிந்திக்காமல் தங்களின் கருத்துகளை உதிர்த்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் தனது 100-வது சதத்தை அடிக்கவில்லையே தவிர, அந்த டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாகவே விளையாடினார்.

 கபில்தேவ் செய்தது என்ன? இப்போது சச்சினை ஓய்வுபெற நிர்பந்திக்கும் முன்னாள் வீரர்கள், தாங்கள் விளையாடிய காலக்கட்டத்தில் என்ன செய்தார்கள்? சச்சின் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்று தொடர்ந்து கூறி வரும் முன்னாள் கேப்டனான கபில்தேவ், எப்படி ஓய்வு பெற்றார்?

 நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சர் ரிச்சர்ட் ஹாட்லியின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்போதைய உலகச் சாதனையான 431 விக்கெட்டை முறியடிக்க வேண்டும் என்பதற்காக வேகம் குறைந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி கடும் போராட்டத்துக்குப் பின் ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை முறியடித்தார்.

 அதன்பிறகு அப்போதைய வீரர்களின் கடும் விமர்சனம் மற்றும் குற்றச்சாட்டுகளுக்குப் பின் 434 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, உலக சாதனை புரிந்த பின்பு தனது ஓய்வை அறிவித்தார் கபில் தேவ்.

 இதுபோன்ற முன்னாள் வீரர்களின் கட்டுப்பாடற்ற விமர்சனங்களால் பல இந்திய வீரர்கள் தங்களது திறமை குறையும் முன்னரே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்கள்.

 இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சாப்பலுடன் ஏற்பட்ட மனக்கசப்பு, டெஸ்ட், ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து இறங்கிய பின்பும்கூட செüரவ் கங்குலி சிறப்பாகவே விளையாடினார். முன்னாள் வீரர்களின் தொடர்ச்சியான விமர்சனங்கள் காரணமாகவே கங்குலி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 கிரிக்கெட்டைப் பொருத்தவரை ஒரு சில வீரர்கள் மட்டுமே தாமாகவே முன்வந்து தங்களது ஓய்வை அறிவித்தனர். அதில் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர் ஆகியோர் முதன்மையானவர்கள்.

 பெரும்பான்மையான வீரர்கள் பல தரப்பினரின் கட்டாயத்தாலேயே அணியிலிருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அப்படி வெளியேற்றப்பட்ட வீரர்களே இப்போது சச்சின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். அவர்களின் வசைக்கு ஏற்ப சச்சின் ஜொலிக்காமல் போனது அவரது துரதிருஷ்டம். இத்தொடரின் ஆரம்ப நிலையில் இந்தியக் கேப்டன் மகேந்திர சிங் தோனி பயன்படுத்திய மூத்த வீரர்களுக்கான சுழற்சி முறை திட்டத்தாலும் சச்சின் ஆட்டம் பாதிக்கப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

 "சச்சினுக்கு சுழற்சி முறை பொருந்தாது. அவர் 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி வரை விளையாடப் போவதில்லை. அதனால் அவர் முத்தரப்புத் தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாட வேண்டும்' என்றார் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி.

 "சச்சின் ஓய்வுபெற வேண்டும் என்று பி.சி.சி.ஐ. வற்புறுத்த முடியாது, அது அவரின் தனிப்பட்ட விருப்பம். அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க சச்சின் ஓய்வுபெற வேண்டும் என்ற கருத்து அபத்தமானது. முத்தரப்பு தொடரில் இளம் வீரர்கள் என்ன சாதித்தார்கள்?' என கேள்வி எழுப்பியுள்ளார் செüரவ் கங்குலி.

 பேட்டால் பதிலளிப்பார்: சச்சின் ஓய்வுபெறும் தருணம் வந்துவிட்டது என்று ஆங்கில ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் 4 ஆண்டுகளுக்கு முன்பே கூப்பாடுபோட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், அப்போது ஏற்பட்ட விமர்சனங்களுக்கு சச்சின் தனது மட்டையால் மட்டுமே பதிலடி கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 இப்போதும் சச்சின், தன்மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவில்லை. ஆனால், மட்டையால் பதிலளிப்பார் என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 உலகின் எந்த மைதானத்திலும் சச்சின் மட்டையைச் சுழற்றி களமிறங்கும்போது, ரசிகர்கள் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செய்வார்கள். இது எந்த நாட்டின் விளையாட்டு வீரருக்கும் கிடைக்காத பெருமை.

 சச்சினைப் பொருத்தவரை

  "Class is permanent, form is temporary', என்ற கோட்பாடு அவருக்கு நிச்சயம் பொருந்தும். கிரிக்கெட் உலகின் பெரும் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கரைத் தொடர்ந்து விமர்சிப்பதால் அவரிடம் இருக்கும் ஆட்டத்திறன் பாதிக்கும் என்று சிலர் கருதலாம்.

 ஆனால் நிச்சயம் அது சச்சினைப் பாதிக்காது. இதற்கு முன்பு பலமுறை அவர் இதுபோன்ற சோதனைக் கட்டத்தைத் தாண்டி வந்துள்ளார்.

 ஒரு சாதனையாளரை விமர்சிப்பதால், அவரைக் கட்டாயப்படுத்துவதால் முன்னாள் வீரர்களுக்கும், ஆங்கில ஊடகங்களுக்கும் என்ன லாபம்?

 சச்சின் டெண்டுல்கர் போன்ற மாபெரும் கிரிக்கெட் வீரர் தன்னுடைய விருப்ப ஓய்வை அவரே அறிவிக்க வேண்டுமே தவிர, கட்டாய ஓய்வுக்கு அவரை நிர்பந்திக்கக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments