முகப்பு
விளையாட்டு

கிளார்க் சதம்; சரிவிலிருந்து மீண்டது ஆஸ்திரேலியா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 95 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் குவித்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:34 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 95 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணி ஒரு கட்டத்தில் 47 ஓவர்களில் 153 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோதும், கேப்டன் கிளார்க்-அறிமுக ஆல்ரவுண்டர் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் (6-வது விக்கெட்டுக்கு 151 ரன்கள்) சரிவிலிருந்து மீண்டது. கேப்டன் கிளார்க் 103 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இப்போட்டி, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய அணியில் முரளி விஜய், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றனர். பிரக்யான் ஓஜாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. புவனேஸ்வர் குமாருக்கு இது அறிமுகப் போட்டியாகும். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 276-வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆல்ரவுண்டர் மோய்சஸ் ஹென்ரிக்ஸ் அந்த அணியின் 432-வது டெஸ்ட் வீரர் ஆவார்.

அஸ்வின் ஆதிக்கம்: இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டேவிட் வார்னர்-எட் கோவன் ஜோடி அந்த அணியின் முதல் இன்னிங்ûஸத் தொடங்கியது. இந்த ஜோடி எவ்வித சிக்கலுமின்றி இந்திய பெüலர்களை எளிதாக எதிர்கொண்டது. இதனால் 15-வது ஓவரில்தான் இந்த ஜோடியை பிரிக்க முடிந்தது. ஹர்பஜன் வீசிய 14-வது ஓவரில் சிக்ஸர் அடித்த கோவன், அஸ்வின் வீசிய அடுத்த ஓவரிலும் சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் அவரின் கணிப்பு தவறாகவே தோனியால் ஸ்டெம்பிட் செய்யப்பட்டார். 45 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த பிலிப் ஹியூஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

சரிவுக்குள்ளான ஆஸ்திரேலியா: இதையடுத்து டேவிட் வார்னருடன் இணைந்தார் ஷேன் வாட்சன். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. வார்னர் 77 பந்துகளில் டெஸ்ட் போட்டியில் 6-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். முன்னதாக, 18 ரன்கள் எடுத்திருந்தபோது வார்னர் கொடுத்த கேட்ச்சை சேவாக் பிடிக்கத் தவறினார். மதிய உணவு இடைவேளையின்போது அந்த அணி 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் முதல் ஓவரை வீசிய அஸ்வின், வாட்சனை எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். 60 பந்துகளைச் சந்தித்த அவர் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து வார்னர் 59 (6 பவுண்டரிகள்) ரன்களிலும், மேத்யூ வேட் 12 ரன்களிலும் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேற, 47 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து தடுமாறியது ஆஸ்திரேலியா.

கிளார்க்-ஹென்ரிக்ஸ் அபாரம்: இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் கிளார்க்கும், மோய்சஸ் ஹென்ரிக்ஸýம் சிறப்பாக ஆடி ரன் சேர்க்க ஆஸ்திரேலியா சரிவிலிருந்து மெதுவாக மீண்டது. அஸ்வின் வீசிய 67-வது ஓவரில் சிக்ஸர் அடித்து அரைசதம் கடந்தார் கிளார்க். மறுமுனையில் இந்திய பெüலர்களை சிறப்பாக எதிர்கொண்ட ஹென்ரிக்ஸ், 101 பந்துகளில் அரைசதம் கண்டார். இவர்கள் இருவரின் சிறப்பான ஆட்டத்தால் 88-வது ஓவரில் 300 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா.

எனினும் அந்த அணி 304 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் அஸ்வின். 132 பந்துகளைச் சந்தித்த ஹென்ரிக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். இதையடுத்து பீட்டர் சிடில் களம் புகுந்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரான 95-வது ஓவரில் பவுண்டரி அடித்து டெஸ்ட் போட்டியில் 23-வது சதத்தைப் பூர்த்தி செய்தார் கிளார்க். 168 பந்துகளில் அவர் இந்த ரன்னை எடுத்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 95 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கிளார்க் 169 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 103 ரன்களும், பீட்டர் சிடில் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்தியத் தரப்பில் அஸ்வின் 30 ஓவர்களில் 88 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

மைக்கேல் கிளார்க் 7,000

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் 11 ரன்கள் எடுத்தபோது டெஸ்ட் போட்டியில் 7,000 ஆயிரம் ரன்களை எட்டினார். இந்த சாதனையை எட்டிய 10-வது ஆஸ்திரேலியர் கிளார்க்.

முன்னதாக அவர் 8 ரன்கள் எடுத்தபோது அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலியர்கள் வரிசையில் 10-வது இடத்தில் இருந்த டான் பிராட்மேனை (6,996 ரன்கள்) பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தைப் பிடித்தார்.

90-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் கிளார்க், இந்தியாவுக்கு எதிராக அடித்த 6-வது சதம் இது. ஒட்டு மொத்ததில் அவர் அடித்த 23-வது சதம் இது. இதன்மூலம் அதிக சதங்கள் அடித்த ஆஸ்திரேலியர்கள் வரிசையில் 7-வது இடத்தைப் பிடித்ததோடு, சர்வதேச அளவில் அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் 20-வது இடத்தை இந்தியாவின் சேவாக், இங்கிலாந்தின் அலாஸ்டர் குக், ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர், பாகிஸ்தானின் மியான் தத் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2011 தென் ஆப்பிரிக்க தொடர் முதல் தற்போது வரை 18 டெஸ்ட் போட்டிகளில் 8 சதம் உள்பட 2,136 ரன்கள் குவித்துள்ளார் கிளார்க். இந்தியாவுக்கு எதிராக விளையாடிய கடைசி 4 டெஸ்ட் போட்டிகளில் 3-ல் சதம் கண்டுள்ளார்.

அசத்திய அஸ்வின்

சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய அஸ்வின், ஆஸ்திரேலியாவின் முதல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாகவும், ஒட்டு மொத்தத்தில் 6-வது முறையாகவும் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவையனைத்துமே இந்திய மண்ணில் கிடைத்ததாகும்.

கடந்த 6 மாதங்களாக பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்காததால் பின்னடைவைச் சந்தித்த அஸ்வின், சென்னை போட்டியை சரியாகப் பயன்படுத்தி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். எனினும் மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படாததால் ஆஸ்திரேலியா சரிவிலிருந்து மீண்டு நல்ல ஸ்கோரை எட்டியுள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு இரு தமிழர்கள்

இந்தப் போட்டியில் தமிழக வீரர்கள் அஸ்வின், முரளி விஜய் ஆகிய இருவரும் அணியில் இடம்பிடித்தனர். சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இரு தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக 1988-ல் இங்கு நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் தமிழகத்தின் சார்பில் ஸ்ரீகாந்த், டபிள்யூ.வி.ராமன் ஆகியோர் விளையாடினர். அதில் அறிமுக வீரராக களமிறங்கிய ராமன், இரு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தம் 92 (9, 83) ரன்கள் எடுத்தார். இந்தியா 255 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

ஹர்பஜன் செஞ்சுரி

சென்னை போட்டியில் விளையாடியதன் மூலம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 10-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங். சர்வதேச அளவில் இந்த சாதனையை எட்டிய 53-வது வீரர் ஆவார்.

100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹர்பஜன் சிங், மதிய உணவு இடைவேளையின்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் என்.சீனிவாசனால் கெüரவிக்கப்பட்டார். அப்போது வெள்ளித்தட்டு ஒன்றை அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் சீனிவாசன். எனினும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹர்பஜன் சிங்குக்கு முதல் நாளில் விக்கெட் எதுவும் கிடைக்காதது ஏமாற்றமாக அமைந்தது.

சச்சின் டெண்டுல்கர் (195), ராகுல் திராவிட் (164), விவிஎஸ்.லட்சுமண் (134), அனில் கும்ப்ளே (132), கபில்தேவ் (131), சுநீல் கவாஸ்கர் (125), திலிப் வெங்சர்க்கார் (116), செüரவ் கங்குலி (113), வீரேந்திர சேவாக் (103) ஆகியோர் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய மற்ற இந்தியர்கள் ஆவர்.

சபாஷ் ஹென்ரிக்ஸ்

முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹென்ரிக்ஸ் 68 ரன்கள் எடுத்ததோடு, சரியான நேரத்தில் கேப்டன் கிளார்க்குடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இதன்மூலம் தன் மீதான பெரிய அளவிலான எதிர்பார்ப்பை அவர் சரியென நிரூபித்துள்ளார்.

இது குறித்து ஹென்ரிக்ஸ் கூறுகையில், "கிளார்க்கின் உதவியால் பதற்றமின்றி விளையாடினேன். சுழற்பந்து வீச்சை கிளார்க் எதிர்கொண்ட விதம் வித்தியாசமானது. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவரைப் போன்று விளையாட நான் முயற்சிக்கவில்லை' என்றார்.

இவர் சிறந்த ரிவர்ஸ்விங் பந்துவீச்சாளரும் ஆவார். அதனால் ரிவர்ஸ்விங் பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை மைதானத்தில் பந்துவீச்சிலும் அவர் கலக்குவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. ஹென்ரிக்ஸ்-கிளார்க் ஜோடி எடுத்த 151 ரன்கள் இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய ஜோடி ஒன்று 6-வது விக்கெட்டுக்கு எடுத்த 3-வது அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.