விளையாட்டு

டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி! தொடரையும் வென்றது!

இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்றது.

சநகன்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

இந்தியா - இலங்கை இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்கள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் மழை பாதிப்புக்கிடையே முதல் இன்னிங்ஸில் இந்தியா 312 ரன்களும், இலங்கை 201 ரன்களும் எடுத்தன. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. இலங்கை அணிக்கு 386 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

4-ஆம் நாள் முடிவில் 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறிக் கொண்டிருந்தது. இதனால் 22 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் வரலாற்று வெற்றி வாய்ப்பு இந்திய அணிக்கு கனிந்துள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

இன்று ஆட்டம் தொடங்கியபோது வழக்கம்போல இஷாந்த் சர்மா மிகுந்த உத்வேகத்துடன் பந்துவீசினார். 21-வது ஓவரில் அவர் மேத்யூஸின் விக்கெட்டை எடுத்திருக்கவேண்டும். ஆனால், அப்போது நோ பால் வீசியதால் கீப்பர் பிடித்த கேட்ச் பயனில்லாமல் போனது. ஆனால், அடுத்த ஓவரில் சில்வாவின் விக்கெட்டை வீழ்த்தினார் உமேஷ் யாதவ். இதன்பிறகு மேத்யூஸும் திரிமானேவும் தாக்குப் பிடித்து ஆடினார்கள். அஸ்வின் மீண்டும் பந்துவீச வந்தபோது திருப்புமுனை உண்டானது. 38-வது ஓவரில் திரிமானேவின் விக்கெட்டை வீழ்த்தி அணிக்குப் புத்துணர்ச்சி அளித்தார் அஸ்வின்.

5-ம் நாள் உணவு இடைவேளையின்போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பிறகு 6-வது விக்கெட்டை எடுக்க இந்திய அணி மிகவும் தடுமாறியது. மிக கவனமாகவும் அதேசமயம் ரன்ரேட்டும் குறையாத வண்ணம் மிக அபாரமாக ஆடினார்கள் மேத்யூஸும் பெரேராவும். 8 பவுண்டரிகளுடன் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் பெரேரா. அணியைக் காப்பாற்றும் உண்மையான தலைவனாக ஆடி வந்த மேத்யூஸ் 217 பந்துகளில் சதம் அடித்தார். பிரிக்கமுடியாதபடி ஆடிவந்த  இந்த ஜோடியைப் பிரித்தார் அஸ்வின். 70 ரன்களில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பெரேரா.

தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணிக்கு 4 விக்கெட்டுகள் தேவை. இலங்கை அணிக்கு 137 ரன்கள் தேவை. மீதம் 36 ஓவர்கள் உள்ளன. இதில் மழையின் மிரட்டல் வேறு. இந்த டெஸ்டின் கடைசிப் பகுதி, மிகவும் பரபரப்பாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் இடைவேளைக்குப் பிறகு வீசிய முதல் ஓவரிலேயே மேத்யூஸின் விக்கெட்டைக் கைப்பற்றினார் இஷாந்த் சர்மா. இதன் மூலம் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200-வது விக்கெட்டை வீழ்த்தினார். 100 ரன்களில் ஆட்டமிழந்தார் மேத்யூஸ். பிறகு ஹெராத், பிரசாத் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார் அஸ்வின். அதற்கடுத்த ஓவரில் பிரதீப்பின் விக்கெட்டை வீழ்த்தினார் மிஸ்ரா. இதனால் இலங்கை அணி 268 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 என வென்றது.

ஆட்ட நாயகனாக புஜாரா தேர்வு செய்யப்பட்டார். மேன் ஆஃப் தி சீரிஸ் பட்டம் அஸ்வினுக்குக் கிடைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT