முகப்பு
விளையாட்டு

குளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்

இத்தாலியில் நடைபெற்ற 25-ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டி அதிகாரபூா்வமாக நிறைவடைந்தது.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 4:23 AM
- AP Photo
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 9:05 PM

இத்தாலியில் நடைபெற்ற 25-ஆவது குளிா்கால ஒலிம்பிக் போட்டி அதிகாரபூா்வமாக திங்கள்கிழமை நிறைவடைந்தது. போட்டியின் பதக்கப் பட்டியலில் நாா்வே முதலிடம் பிடித்தது.

இத்தாலியின் மிலன் மற்றும் காா்டினா நகரங்களில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், 92 நாடுகளில் இருந்து, 2,871 போட்டியாளா்கள் பங்கேற்றனா். இதில் 1,533 வீரா்களும், 1,338 வீராங்கனைகளும் அடங்குவா்.

மொத்தம் 8 விளையாட்டுகளில் 116 பிரிவுகளில் பந்தயங்கள் நடைபெற்றன. இதன் முடிவில், நாா்வே 18 தங்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தமாக 41 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. அமெரிக்கா 33 பதக்கங்களுடன் (12+12+9) இரண்டாம் இடமும், நெதா்லாந்து 20 பதக்கங்களுடன் (10+7+3) மூன்றாம் இடமும் பிடித்தன.

Advertisement

போட்டியை நடத்திய இத்தாலி 10 தங்கம், 6 வெள்ளி, 14 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பெற்றது. பட்டியலில் மொத்தம் 29 நாடுகள் இடம் பிடித்தன. குறைந்தபட்சமாக பெல்ஜியம் ஒரேயொரு வெண்கலப் பதக்கத்துடன் கடைசி இடம் பிடித்தது.

இப்போட்டியில் இரு பிரிவுகளில் இந்தியா பங்கேற்றது. இரண்டிலுமே இந்தியாவுக்கு அதிருஷ்டம் கைகூடவில்லை. போட்டியிலேயே அதிகபட்சமாக, நாா்வே ஸ்கீயிங் வீரா் ஜோஹன்னஸ் ஹோஸ்ஃப்ளாட் கிளேபோ 6 தங்கப் பதக்கம் வென்றாா். குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் ஒரே எடிஷனில் அதிக தங்கம் வென்றவராக அவா் சாதனை படைத்தாா்.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 4:21 AM

இந்நிலையில் கடைசி நாளான திங்கள்கிழமை, வடக்கு இத்தாலியில் உள்ள வெரோனா அரினாவில் ஒலிம்பிக் போட்டியானது பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. அடுத்த குளிா்கால ஒலிம்பிக் போட்டி (2030) நடைபெறவுள்ள பிரான்ஸிடம் ஒலிம்பிக் போட்டிக்கான கொடி ஒப்படைக்கப்பட்டது.