கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

பட்லர் அதிரடி வீண்: பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

DIN


உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்றைய (சனிக்கிழமை) ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மற்றும் கேப்டன் ஃபின்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அந்த அணிக்கு வார்னர் 43 ரன்கள் சேர்த்து ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து, களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கையளித்தார். 

ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. 30 ரன்கள் வரை எடுத்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் அதை அரைசதமாக மாற்ற தவறினர். எனினும், ஸ்டீவ் ஸ்மித் அரைசதத்தையும் கடந்து சதம் அடித்து அசத்தினார். இதனால், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 102 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிளங்கட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

298 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராய் 32 ரன்கள் எடுத்தும், பேர்ஸ்டோவ் 12 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும்  20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இந்த நிலையில் களமிறங்கிய கேப்டன் பட்லர், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை அதிரடியில் மிரட்டினார். இதனால், அந்த அணியின் ரன் ரேட் அதிகரித்தது. பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அடித்து வந்த பட்லர் 31 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வின்ஸும் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து, வோக்ஸ் மற்றும் பிளங்கட் அந்த அணியை வெற்றி இலக்குக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், 40 ரன்கள் எடுத்து விளையாடி வந்த கிறிஸ் வோக்ஸ் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். பிளங்கட்டும் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். 

இதன்மூலம், இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT