பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியின்போது இந்திய வீரர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து ஐசிசியிடம் முறையிடுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த போட்டியின்போது, இரண்டு அணிகளின் வீரர்களும் இடையிடையே அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போட்டி நிறைவடைந்த பிறகு இரண்டு அணிகளின் வீரர்களும் தங்களுக்குள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியின்போது இந்திய வீரர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து ஐசிசியிடம் முறையிடுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி பேசியதாவது: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின்போது, இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீர்களை சீண்டும் விதமான செயல்களில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிடும். அரசியல் மற்றும் விளையாட்டு இரண்டும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் சர்ஃபராஸ் அகமது பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியின்போது, இந்திய வீரர்கள் சரியான முறையில் நடந்துகொள்ளவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் முறையிடவுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.