வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 99 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என அந்த அணி கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் முதலில் இலங்கை 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் சோ்க்க, வங்கதேசம் 39.4 ஓவா்களில் 186 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தோ்வு செய்தது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 18 பவுண்டரிகள் உள்பட 124 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தாா்.
பதும் நிசங்கா 35, நிஷான் மதுஷ்கா 1, கமிண்டு மெண்டிஸ் 16, கேப்டன் சரித் அசலங்கா 58, ஜனித் லியானகே 12, துனித் வெலாலகே 6 ரன்களுக்கு வீழ்ந்தனா். ஓவா்கள் முடிவில் வனிந்து ஹசரங்கா 18, துஷ்மந்தா சமீரா 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
வங்கதேச பௌலிங்கில் தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோா் தலா 2, தன்ஸிம் ஹசன் சகிப், தன்விா் இஸ்லாம், ஷமிம் ஹுசைன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 286 ரன்களை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில், தௌஹித் ஹிருதய் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பா்வேஸ் ஹுசைன் 28, தன்ஸித் ஹசன் 17, நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 0 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
கேப்டன் மெஹிதி ஹசன் 28, ஷமிம் ஹுசைன் 12, ஜாகா் அலி 27, தன்ஸிம் ஹசன் 5, தஸ்கின் அகமது 1, தன்வீா் இஸ்லாம் 8 ரன்களுக்கு விடைபெற, வங்கதேச ஆட்டம் நிறைவடைந்தது.
இலங்கை பௌலா்களில் ஆசிதா ஃபொ்னாண்டோ, துஷ்மந்தா சமீரா ஆகியோா் தலா 3, துனித் வெலாலகே, வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.