முகப்பு
கிரிக்கெட்

சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!

ஐபிஎல் தொடரில் தில்லி அணியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி பெற்றதைப் பற்றி...

Updated On : 11 ஏப்ரல் 2026, 11:34 pm IST
ஜேமி ஓவர்டன் - சென்னை அணியினர். - படம்: எக்ஸ்.
பகிர்:

நடப்பு ஐபிஎல் தொடரில் தில்லி அணியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் விளையாடியது.

சென்னை சூப்பர் கிங்ஸில் முதல் மூன்று போட்டிகளில் சோபிக்காத சஞ்சு சாம்சன், இன்றையப் போட்டியில் அதிரடியில் மிரட்டினார். அவர் தொடக்கம் முதலே மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 18 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Advertisement

Advertisement

இதனையடுத்து, சஞ்சு சாம்சனுடன் இளம்வீரர் ஆயுஷ் மாத்ரே ஜோடி சேர்ந்து, அவரும் அதிரடியில் மிரட்டினார். அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் சதம் விளாசியும், ஆயுஷ் மாத்ரே அரைசதம் விளாசியும் அசத்தினர்.

ஆயுஷ் மாத்ரே 36 பந்துகளில் 59 ரன்கள் (3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள்) எடுத்து ரிட்டையர்டு அவுட் ஆனார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115* ரன்கள் (15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு நான்காவது சதமாகப் பதிவானது. ஷிவம் துபே 10 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 20 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்தது.

பின்னர், 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தில்லி அணி 20 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

தில்லி அணிக்காக கடைசிவரைப் போராடிய திரிஷ்டன் ஸ்டப்ஸ் அதிகபட்சமாக 60 ரன்களும் (3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள்), அவரைப் போலவே பதும் நிஷங்கா 41 ரன்களும்ம் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 18 ரன்களும், சமீர் ரிஸ்வி 6 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் ஒரு ரன்னும், டேவிட் மில்லர் 17 ரன்களும், அசுதோஷ் சர்மா 19 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணித் தரப்பில் அற்புதமாக பந்துவீசிய ஜேமி ஓவர்டன் 4 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளும், அன்ஷுல் காம்போஜ் 3 விக்கெட்டுகளும், கலீல் அகமது, குர்ஜப்னீத் சிங், நூர் அமகது உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

நடப்பு தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி முதல் மூன்று போட்டிகளில் விளையாடி தோல்வியைத் தழுவி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருந்த நிலையில், முதல் வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் திடலில் தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்த சென்னை அணி, இன்று அந்த சோகத்திற்கு முடிவு கட்டியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

summary

Sanju Samson, Jamie Overton shine in Chennai Super Kings' 23-run win vs Delhi Capitals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.