அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?
நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி கிடைக்குமா என்பது குறித்து...
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நடப்பு சீசன் இதுவரையில் சிறப்பாக அமையவில்லை. இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு இடங்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. குவாஹாட்டியில் நடைபெற்ற முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக தோல்வி, சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக தோல்வி, பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக தோல்வி என முதல் மூன்று போட்டிகளுமே சிஎஸ்கேவுக்கு சரியாக அமையவில்லை.
Advertisement
சென்னை சேப்பாக்கம் திடலில் நாளை (ஏப்ரல் 11) நடைபெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தில்லி கேபிடல்ஸை எதிர்கொள்கிறது. முதல் வெற்றிக்கான தேடலில் உள்ள சிஎஸ்கேவுக்கு பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. அணியில் இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸ் இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது. தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தில்லிக்கு எதிரான போட்டியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவது தொடர்பாக எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து டிரேடிங் மூலம் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்தபோது, ரசிகர்கள் அவரது வரவை கொண்டாடினர். ஆனால், இதுவரை அவரிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் வரவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. அவர்கள் மிகுந்த அழுத்தத்தில் இருப்பார்கள்.
மிடில் ஆர்டரில் இளம் வீரர் கார்த்திக் சர்மா மிகுந்த அழுத்தத்தில் உள்ளதாகத் தெரிகிறது. அவர் ரன்கள் குவிக்கத் தடுமாறுகிறார். பிரசாந்த் வீரர் பின் வரிசையில் நன்றாக விளையாடுகிறார். சிஎஸ்கேவில் தொடர்ச்சியாக ஒருவர் நன்றாக ரன்கள் குவிக்கிறார் என்றால், அது சர்ஃபராஸ் கான் மட்டுமே. அவர் மூன்று போட்டிகளிலுமே நன்றாக விளையாடி ரன்கள் குவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு மிகவும் சராசரியாக உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் 250 ரன்கள் விட்டுக் கொடுத்தனர். ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்து அசத்தியது ஆர்சிபி. அந்த அளவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு மோசமாக உள்ளது.
தில்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் வலுவாக உள்ளது. வலுவான தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா? அதன் வெற்றிக் கணக்கைத் தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள் உள்ளனர்.