ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!
பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் தனது முதல் சதம் அடித்த ஸ்டீவ் ஸ்மித் குறித்து...
பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் ஸ்டீவ் ஸ்மித் தனது முதல் சதத்தினை நிறைவு செய்து அசத்தியுள்ளார். இந்த சதத்துடன் ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் முதன்முதலாக இந்த சீசனில் பங்கேற்ற ஸ்டீவ் ஸ்மித் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அறிமுக சீசனில் தனது முதல் சதத்தை அடித்து அசத்தியுள்ளார்.
ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிக்கு எதிராக முல்தான் சுல்தான்ஸ் 20 ஓவர்களில் 213/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஹைதராபாத் கிங்ஸ்மேன் 19.3 ஓவர்களில் 214/6 ரன்கள் எடுத்து வென்றது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 50 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து வென்றார். இதில் ஹுனைன் ஷா ஓவரில் 28 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் ஹைதராபாத் அணியில் உஸ்மான் கான் சதம் (101) அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் தனது 6ஆவது சதத்தினை நிறைவு செய்துள்ளார். பிபிஎல் தொடரில் 4 சதங்கள், ஐபிஎல் தொடரில் 1, பிஎஸ்எல் தொடரில் 1 என மொத்தமாக 6 சதங்கள் அடித்துள்ளார்.
கடந்த டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு மறுக்கப்பட்டு பின்னர் மாற்றுவீரராக இணைந்தும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனப் போற்றப்படும் ஸ்டீவ் ஸ்மித் டி20 கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அவரை அணியில் எடுக்காமல் இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.