இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கப்பட்டது பற்றி...
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்குவதாக கேரள கிரிக்கெட் சங்கம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் கேரள கிரிக்கெட் சங்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஸ்ரீசாந்த்துக்கு மூன்று ஆண்டுகள் தடை விதித்து கேரள கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.
இந்த தடையை எதிர்த்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு எதிராகத் தான் வெளியிட்ட கருத்துகளுக்காக வருத்தம் தெரிவித்து, நிபந்தனையற்ற மன்னிப்புக் கடிதத்தை ஸ்ரீசாந்த் சமர்ப்பித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற கேரள கிரிக்கெட் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் ஸ்ரீசாந்த்தின் மன்னிப்புக் கடிதம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அவர் நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, அவர் மீதான தடையை நீக்க அக்கூட்டம் ஒருமனதாக முடிவு செய்தது.
இருப்பினும், எதிர்காலத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீசாந்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், வருகின்ற கேரள கிரிக்கெட் லீக் தொடரில் 'ஏரிஸ் கொல்லம் செயிலர்ஸ்' (Aries Kollam Sailors) அணியின் இணை உரிமையாளராக ஸ்ரீசாந்த் செயல்பட முடியும்.
இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், சர்வதேச கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) விளையாடியுள்ளார்.
சர்வதேச அளவில், 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும், 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும், 10 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
The Kerala Cricket Association has lifted the three-year ban on Indian cricketer Sreesanth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.