முகப்பு
கிரிக்கெட்

ரன்கள் குவிப்பதில் தடுமாற்றம்; இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Updated On : 6 மார்ச் 2026, 2:54 pm IST
அபிஷேக் சர்மா - படம் | AP
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் அரையிறுதிப் போட்டிகள் நிறைவடைந்தன. மும்பை வான்கடே திடலில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின.

பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிரடியாக விளையாடி 89 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கத் தவறி வரும் அபிஷேக் சர்மா, நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியிலும் 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, தொடர்ந்து ரன்கள் குவிக்கத் தவறி வரும் அபிஷேக் சர்மா இறுதிப்போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா?

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான அபிஷேக் சர்மா பெரிய ஏமாற்றத்தை அளித்தார். உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக அதிரடியில் மிரட்டிய அவர், உலகக் கோப்பைத் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் மட்டுமே அவர் நன்றாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால், அந்தப் போட்டியில் வழக்கமாக விளையாடும் அவரது அதிரடி ஆட்டத்தை அரிதாகவே பார்க்க முடிந்தது. வலதுகை இடதுகை காம்பினேஷனுக்காக சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் வந்த பிறகும், அபிஷேக் சர்மாவிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் வரவில்லை.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 0,0,0,15,10 மற்றும் 9 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்தார். இருப்பினும், இந்திய அணி நிர்வாகம் அவருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாமல் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கி வருகிறது.

அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியதையடுத்து அகமதாபாதில் நாளை மறுநாள் (மார்ச் 8) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அபிஷேக் சர்மாவை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க இந்திய அணி நிர்வாகம் நினைக்கவில்லை என்பது கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே கூறிய விஷயங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அபிஷேக் சர்மாவின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், அவர் சரியாக விளையாடாத இந்த நேரத்தில் மற்ற வீரர்கள் அவரை பாதுகாக்க வேண்டும் எனவும் சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார். அதனால், இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மாவை பிளேயிங் லெவனிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றேத் தெரிகிறது.

இருப்பினும், அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக ரிங்கு சிங்கை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரலாம் எனக் கூறப்படுகிறது. ரிங்கு சிங்கை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வந்தால், அவர் எந்த இடத்தில் களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுகிறது. தற்போது, இந்திய அணிக்கு டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் சரியாக அமைந்திருக்கிறது. அதனால், ரிங்கு சிங் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டால், 7-வது அல்லது 8-வது வீரராகவே அவர் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. அது இந்திய அணிக்கு எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது தெரியவில்லை.

கடந்த மூன்று ஆட்டங்களாக இந்திய அணி மிகவும் நன்றாக விளையாடி வெற்றி பெற்று வருவதால், அபிஷேக் சர்மாவின் ஃபார்மை காரணமாக வைத்து இறுதிப்போட்டிக்கு முன்பாக பிளேயிங் லெவனில் இந்திய அணி நிர்வாகம் மாற்றம் செய்யாது எனத் தெரிகிறது. அதனால், அரையிறுதியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் இந்திய அணி களமிறங்கும் எனத் தெரிகிறது.

இறுதிப்போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் மாற்றமில்லாமல் விளையாடும் பட்சத்தில், அபிஷேக் சர்மா அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு முக்கியமான போட்டியில் அதிக ரன்கள் குவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

summary

There are doubts over whether opener Abhishek Sharma will play in the final match against New Zealand in the T20 World Cup.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments