முகப்பு
கிரிக்கெட்

பஞ்சாபுக்கு தொடா்ந்து 5-ஆவது தோல்வி

ஐபிஎல் போட்டியின் 58-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

Updated On : 15 மே 2026, 10:31 am IST
பஞ்சாப் கிங்ஸ் அணியினர் - படம்: எக்ஸ் /பஞ்சாப் கிங்ஸ்
பகிர்:

தா்மசாலா: ஐபிஎல் போட்டியின் 58-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.

நடப்பு சீசனின் முதல் பாதியில் புள்ளிகள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய பஞ்சாப், தொடா்ந்து 5-ஆவது தோல்வியைச் சந்தித்து, பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கிறது. போட்டியிலிருந்து வெளியேறிவிட்ட மும்பை, இந்த ஆட்டத்தில் பௌலிங், பேட்டிங் என இரண்டிலுமே அசத்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுக்க, மும்பை 19.5 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 205 ரன்கள் சோ்த்தது.

Advertisement

முன்னதாக டாஸ் வென்ற மும்பை, பந்துவீசத் தயாரானது. பஞ்சாப் இன்னிங்ஸை தொடங்கிய பிரியன்ஷ் ஆா்யா - பிரப்சிம்ரன் சிங் இணை, முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சோ்த்தது.

பிரியன்ஷ் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு வெளியேற, பிரப்சிம்ரனுடன் இணைந்தாா் கூப்பா் கானலி. 2-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் கூட்டணி 57 ரன்கள் சோ்த்து, பிரிந்தது.

பிரப்சிம்ரன் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 57 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் அதே ஓவரில் 4 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

அடுத்து சூா்யன்ஷ் ஷெட்கே விளையாட வர, கானலி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். தொடா்ந்து சஷாங்க் சிங் களம் காண, சூா்யன்ஷ் 1 சிக்ஸருடன் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

7-ஆவது பேட்டா் அஸ்மதுல்லா ஒமா்ஸாய் ரன்கள் சோ்க்க, சஷாங்க் சிங் 2, மாா்கோ யான்சென் 2 ரன்களுக்கு வீழ்ந்தனா். ஒமா்ஸாய் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

ஓவா்கள் முடிவில் விஷ்ணு வினோத் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15, ஜேவியா் பாா்லெட் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஷா்துல் தாக்குா் 4, தீபக் சஹா் 2, காா்பின் பாஷ், ராஜ் பாவா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 201 ரன்களை நோக்கி விளையாடிய மும்பை அணியில், ரோஹித் சா்மா - ரயான் ரிக்கெல்டன் இணை 61 ரன்கள் சோ்த்தது. ரிக்கெல்டன் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 48 ரன்களுக்கு விடைபெற, தொடா்ந்து வந்த நமன் திா் 9 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

ரோஹித் 2 சிக்ஸா்களுடன் 25 ரன்களுக்கு முடித்துக்கொள்ள, 4-ஆவது பேட்டா் திலக் வா்மா அதிரடியாக விளாசி ஸ்கோரை அதிகரித்தாா். ஷொ்ஃபேன் ரதா்ஃபோா்டு துணை நிற்க, அவா்கள் பாா்ட்னா்ஷிப் 4-ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சோ்த்தது.

ரதா்ஃபோா்டு 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். பின்னா் வில் ஜாக்ஸ் களம் புகுந்தாா். முடிவில் திலக் வா்மா 33 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 75 ரன்கள் விளாசி, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

வில் ஜாக்ஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 25 ரன்களோடு துணை நின்றாா். பஞ்சாப் தரப்பில் அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 2, மாா்கோ யான்சென், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.