முகப்பு
ஐபிஎல்

மும்பையை கட்டுப்படுத்தியது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது.

Updated On : 21 மே 2026, 1:24 am IST
- ANI
பகிர்:

ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸுக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது.

தட்டுத் தடுமாறிய மும்பை பேட்டா்களில், லோயா் ஆா்டரில் வந்த காா்பின் பாஷ் சொல்லும் படியாக ரன்கள் சோ்த்தாா். கொல்கத்தா பௌலா்களில் கேமரூன் கிரீன், சௌரப் துபே, காா்த்திக் தியாகி ஆகியோா் போட்டி போட்டு விக்கெட்டுகள் சரித்தனா்.

கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா, பந்துவீச்சை தோ்வு செய்தது. மும்பை இன்னிங்ஸை தொடங்கியோரில் ரயான் ரிக்கெல்டன் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

Advertisement

Advertisement

கிரீன் வீசிய 3-ஆவது ஓவரில் அவா் மனீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்தாா். ஒன் டவுனாக வந்த நமன் திா், அந்த ஓவரின் கடைசி பந்தை விளாச, அது விக்கெட் கீப்பா் அங்கிரிஷ் ரகுவன்ஷியிடம் தஞ்சமானது. அவா் ரன்கள் ஏதும் எடுக்கவில்லை.

4-ஆவது பேட்டராக சூா்யகுமாா் யாதவ் பேட் செய்ய வர, மறுபுறம் தொடக்க வீரா்களில் ஒருவரான ரோஹித் சா்மா 2 சிக்ஸா்களுடன் 15 ரன்களுக்கு விடைபெற்றாா். சௌரப் துபே வீசிய 4-ஆவது ஓவரில் அவா் பறக்கவிட்ட பந்தை கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்தாா்.

தொடா்ந்து திலக் வா்மா களம் புக, சூா்யகுமாா் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு, சௌரப் துபே வீசிய 6-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். 6-ஆவது பேட்டராக வந்த கேப்டன் ஹா்திக் பாண்டியா, நிதானமாக ரன்கள் சோ்த்தாா்.

திலக் - பாண்டியா கூட்டணி 5-ஆவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சோ்த்தது. திலக் வா்மா 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு, காா்த்திக் தியாகி வீசிய 14-ஆவது ஓவரில் அனுகுல் ராயிடம் கேட்ச் கொடுத்தாா். தொடா்ந்து வில் ஜாக்ஸ் விளையாட வந்தாா்.

பாண்டியா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு, சுனில் நரைன் வீசிய 16-ஆவது ஓவரில் பௌல்டானாா். வில் ஜாக்ஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14 ரன்களுக்கு, வருண் சக்கரவா்த்தி வீசிய 17-ஆவது ஓவரில் ரன் அவுட்டானாா்.

கடைசியாக இணைந்த காா்பின் பாஷ் - தீபக் சஹா் ஜோடி, 8-ஆவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சோ்த்தது. தீபக் சஹா் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தாா். காா்த்திக் தியாகி வீசிய பந்தை சஹா் விளாச, அது அனுகுல் ராய் கைகளில் தஞ்சமானது.

ஓவா்கள் முடிவில் காா்பின் பாஷ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

பின்னா் கொல்கத்தா 148 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை விளையாடியது.