லக்னௌவுக்கு எதிரான தோல்வி சிஎஸ்கேவுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கும்: ரவி சாஸ்திரி
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தோல்வியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தோல்வியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரசியமாக மாறி வருகிறது. ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தோல்வியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியிலிருந்து சிஎஸ்கேவுக்கு நிறைய நேர்மறையான விஷயங்கள் எடுத்துக் கொள்ள இருப்பதாக நான் கூறுவேன். பேட்டிங் செய்வதற்கு லக்னௌ ஆடுகளம் அவ்வளவு எளிதாக இல்லை. இருப்பினும், சிஎஸ்கே 187 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் அதிக ரன்கள் எடுக்கவில்லை. அவர்கள் சிறப்பாக விளையாடினால், சிஎஸ்கேவுக்கு அது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும்.
லக்னௌ போன்ற ஆடுகளங்களில் எந்த மாதிரியான லென்த்தில் பந்துவீச வேண்டும் என சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். சென்னை சேப்பாக்கத்தில் எப்படி பந்துவீசினால் விக்கெட்டுகள் வீழ்த்தலாம், ரன்களைக் கட்டுப்படுத்தலாம் என சிஎஸ்கே வீரர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். ஆனால், லக்னௌ போன்ற சவாலான ஆடுகளங்களில் பந்துவீசுவதற்கும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும். லக்னௌவுக்கு எதிரான போட்டி சிஎஸ்கேவுக்கு சரியாக அமையவில்லை. ஆனால், இந்த தோல்வியிலிருந்து சிஎஸ்கே நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கும் என்றார்.
லக்னௌவுக்கு எதிரான தோல்வி சிஎஸ்கே அடுத்து விளையாடவுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளை எதிர்த்து சிஎஸ்கே விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.