முகப்பு
FIFA 2018

நைஜீரியாவை வீழ்த்திய ஆட்டத்தில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி நிகழ்த்திய சாதனைகள்!

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:04 PM
பகிர்:

உலகக் கோப்பை 2018-ல் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி. தொடக்க ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியிடம் டிரா செய்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் 3-0 என ஆர்ஜென்டீனாவை வென்றது குரோஷிய அணி. இதையடுத்து வெறும் 1 புள்ளியுடன் நைஜீரியாவை நேற்று எதிர்கொண்டது முன்னாள் சாம்பியனான ஆர்ஜென்டீனா அணி. வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்த ஆட்டத்தில் 2-1 என்கிற கோல் கணக்கில் அட்டகாசமாக வென்று நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி படைத்துள்ளது.

16 முறை உலகக் கோப்பையில் விளையாடி, ஐந்துமுறை அரையிறுதிக்குத் தகுதி பெற்று, ஐந்துமுறை இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்து இருமுறை உலகக் கோப்பையை வென்றுள்ளது ஆர்ஜென்டீனா அணி. இந்நிலையில் ரஷிய உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிவிடுமா என்கிற அச்சத்தில் நேற்றைய ஆட்டத்தைக் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். 

மிகவும் பரபரப்பான முறையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் கோல் அடித்தது ஆர்ஜென்டீனா. முதல் கோலை மெஸ்ஸி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதன்பிறகு பெனால்டி மூலம் நைஜீரியா கோல் அடித்து சமன் செய்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் நைஜீரிய அணி பிரமாதமாக விளையாடியது. இதனால் ரசிகர்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் 4 நிமிடங்கள் மீதமுள்ள நிலையில் மார்கோஸ் ரோஜோ அட்டகாசமான கோல் அடித்து ஆர்ஜென்டீனா அணி வெற்றி பெற உதவினார். மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா 2-1 என ஐஸ்லாந்தைத் தோற்கடித்ததால் 4 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஆர்ஜென்டீனா.

Advertisement

இந்த ஆட்டத்தில் கோல் அடித்த மெஸ்ஸி சில சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

* உலகக் கோப்பை வரலாற்றில், டீன் வயதில், 20களில், 30களில் கோல் அடித்த ஓரே வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் மெஸ்ஸி. 2006 உலகக் கோப்பைப் போட்டியில் 18 வயதில் ஒரு கோல் அடித்தார். 2014 உலகக் கோப்பைப் போட்டியில் 4 கோல்கள் அடித்தார். அதாவது 26 வயதில். 31 வயதைக் கடந்த மெஸ்ஸி, இந்தப் போட்டியில் நேற்று தன்னுடைய முதல் கோலை அடித்தார். 

(பீலே கோல் அடிக்கவில்லையா என்று கேள்வி எழுப்புவர்களுக்கு - உலகக் கோப்பையில் 17 வயதில், 21 வயதில், 25 வயதில், 29 வயதில் அவர் கோல் அடித்துள்ளார். அதாவது 20களில் பல கோல்கள் அடித்த அவர், 30 வயதாக நான்கு மாதங்கள் இருக்கும்போது தனது கடைசி உலகக் கோப்பையை (1970) விளையாடி முடித்துவிட்டார்.

* மெஸ்ஸி இதுவரை அடித்த 6 உலகக் கோப்பை கோல்களில் மூன்று கோல்கள் நைஜீரியாவுக்கு எதிராக அடித்தவை. மேலும் உலகக் கோப்பையில் 662 நிமிடங்களுக்குப் பிறகு நேற்று கோல் அடித்துள்ளார். கடைசியாக 2014 போட்டியில் முதல் சுற்றில், நைஜீரியாவுக்கு எதிராக கோல் அடித்தார்.

* மரடோனா, கேப்ரியல் படிஸ்டுடா, மெஸ்ஸி ஆகிய மூன்று ஆர்ஜென்டீனா வீரர்கள் மட்டுமே மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் கோல் அடித்துள்ளார்கள்.

* உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆர்ஜென்டீனா அணிக்கு எதிராகத் தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோற்றுள்ளது நைஜீரியா. 

* இந்த உலகக் கோப்பையின் 100-வது கோலை அடிக்கும் வாய்ப்பு மெஸ்ஸிக்குக் கிடைத்துள்ளது.

* 2014-ல் நைஜீரியாவை 3-2 எனத் தோற்கடித்தது ஆர்ஜென்டீனா அணி. அப்போது மெஸ்ஸி, ரோஜோவும் கோல் அடித்தது போல நேற்றைய ஆட்டத்திலும் இருவரும் கோல் அடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments