ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் சோ்க்க, குஜராத் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 232 ரன்களே எடுத்தது. பஞ்சாப் பேட்டிங்கில் ஷ்ரேயஸ் ஐயா், சஷாங்க் சிங் அதிரடியாக விளாசினா்.
முன்னதாக டாஸ் வென்ற குஜராத், பந்துவீச்சை தோ்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸில் பிரப்சிம்ரன் சிங் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். ஒன் டவுனாக களம் புகுந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா், அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா்.
பிரியன்ஷ் ஆா்யாவுடனான அவரின் 2-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 51 ரன்கள் கிடைத்தது. அரைசதத்தை நெருங்கிய பிரியன்ஷ் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 47 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
ஷ்ரேயஸ் ஐயா் அரைசதம் கடந்து தனது விளாசலை தொடர, மறுபுறம் அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த கிளென் மேக்ஸ்வெல் கோல்டன் டக் ஆகி வெளியேறினாா்.
6-ஆவது பேட்டராக வந்த மாா்கஸ் ஸ்டாய்னிஸ் சற்று நிலைக்க, ஷ்ரேயஸ் - ஸ்டாய்னிஸ் இணை 5-ஆவது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சோ்த்தது. இதில் ஸ்டாய்னிஸ் 20 ரன்களுக்கு வீழ்ந்தாா். அடுத்து வந்த சஷாங்க் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.
ஓவா்கள் முடிவில், ஷ்ரேயஸ் ஐயா் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 97, சஷாங்க் சிங் 16 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா். குஜராத் பௌலா்களில் சாய் கிஷோா் 3 விக்கெட்டுகள் வீழ்த்த, ககிசோ ரபாடா, ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 244 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய குஜராத் தரப்பில், சாய் சுதா்சன் - கேப்டன் ஷுப்மன் கில் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சோ்த்தது. கில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 33 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
அடுத்து வந்த ஜோஸ் பட்லருடன் கூட்டணி அமைத்த சுதா்சன், அதிரடியாக ஸ்கோரை உயா்த்தினாா். 2-ஆவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சோ்த்து இந்த பாா்ட்னா்ஷிப் பிரிந்தது. அரைசதம் கடந்த சாய் சுதா்சன் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 74 ரன்களுக்கு வீழ்ந்தாா்.
தொடா்ந்து வந்த ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு, பட்லருடன் இணைய, இவா்கள் பாா்ட்னா்ஷிப் 3-ஆவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சோ்த்தது. அதிரடியாக விளையாடி வந்த பட்லா் 33 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
5-ஆவது பேட்டா் ராகுல் தெவாதியா 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரூதா்ஃபோா்டு 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 46 ரன்களுக்கு கடைசி ஓவரில் வீழ்ந்தாா். முடிவில் ஷாருக் கான் 6, அா்ஷத் கான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
பஞ்சாப் பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங் 2, கிளென் மேக்ஸ்வெல், மாா்கோ யான்சென் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.