முகப்பு
ஸ்பெஷல்

சேப்பாக்கம் மைதானத்தில் செல்பேசி கொண்டு செல்ல அனுமதி: சிஎஸ்கே அறிவிப்பு

பலதரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்ததால் செல்பேசியைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:42 PM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கு மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டியை நடத்தக் கூடாது என தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையும் மீறி போட்டி நடத்தப்பட்டால், மைதானத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் விளைவாக சேப்பாக்கம் மைதானத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும்போது மைதானத்துக்கு வெளியேயும், உள்ளேயும் 100 ஆய்வாளர்கள், 200 உதவி ஆய்வாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கூடுதல் ஆணையர்கள், 3 இணை ஆணையர்கள், 13 துணை ஆணையர்கள், 29 உதவி ஆணையர்கள் ஆகியோர் பாதுகாப்பைக் கண்காணிக்கின்றனர். மேலும் கமாண்டோ படையின் ஒரு அணியும் அதி தீவிரப் படையின் 4 குழுக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மைதானத்துக்கு வரும் ரசிகர்கள் பேக், செல்பேசி, ரேடியோ, டிஜிட்டல் டைரி, மடிக்கணினி, டேப் ரிகார்டர், பைனாகுலர், ரிமோட் கன்ட்ரோல், ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய கார் சாவி, இசைக் கருவிகள், விடியோ கேமரா, பட்டாசு, தண்ணீர் பாட்டில்கள், சிகரெட், பீடி, பேட்டரி, கருப்புத் துணிகள், பதாகைகள், கொடிகள், உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள் ஆகியவை கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி கொண்டு செல்ல முற்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும். மைதானத்துக்குள் பொருள்களை வீசுபவர்கள், ரசிகர்களுக்குத் தொந்தரவு செய்பவர்கள், தவறான வகையில் பேசுபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள்.

Advertisement

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள் பல தரப்பிலும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டால் பல்வேறு சிரமங்களுக்கு ரசிகர்கள் உள்ளாக நேரிடும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் பலதரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்ததால் செல்பேசியைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments