சென்னைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விளையாடவுள்ள டி வில்லியர்ஸ்!
சென்னை - பெங்களுர் இடையேயான ஐபிஎல் ஆட்டம் புணேவில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது...
சென்னை - பெங்களுர் இடையேயான ஐபிஎல் ஆட்டம் புணேவில் இன்று மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது.
காய்ச்சல் காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் விளையாடாத டி வில்லியர்ஸ் இன்றைய ஆட்டத்தில் விளையாடவுள்ளார். இத்தகவலை ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் வெட்டோரி தெரிவித்துள்ளார். இந்த வருட ஐபிஎல் ஆட்டத்தில் டி வில்லியர்ஸ் 280 ரன்கள் எடுத்துள்ளார்.
அதேசமயம் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக், ஒரு திருமணத்துக்குச் செல்லவேண்டியிருப்பதால் தென் ஆப்பிரிக்காவுக்குப் பறந்துள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் குயிண்டன் டி காக்-குக்குப் பதிலாக டி வில்லியர்ஸ் இடம்பெறவுள்ளார். எனினும் திங்கள் அன்று ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டி காக் பங்கேற்பார் என வெட்டோரி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு விளையாடிய ஆட்டங்களில் சென்னைக்குத் தோல்வியும் பெங்களூருவுக்கு வெற்றியும் கிடைத்தன.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 33-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. இத்துடன் 9 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்த இரு அணிகளில், கொல்கத்தாவுக்கு இது 5-வது வெற்றி. சென்னைக்கு இது 3-வது தோல்வி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 17.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து வென்றது. கொல்கத்தா வீரர் சுனில் நரைன் ஆட்டநாயகன் ஆனார்.
பெங்களூரு அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியைத் தழுவியது. மும்பையின் ஹார்திக் பாண்டியா 50 ரன்கள், மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக ஆடினார். முதலில் ஆடிய பெங்களூரு அணி 167/7, மும்பை அணி 153/7 ரன்களை எடுத்தன.
புள்ளிகள் பட்டியலில் சென்னை 2-ம் இடத்திலும் பெங்களூர் 6-ம் இடத்திலும் உள்ளன. பெங்களூர் அணி இன்று வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் 5-ம் இடத்துக்கு முன்னேறும். சென்னை அணி வெற்றி பெறுகிற பட்சத்தில் 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு மீண்டும் முன்னேறும்.
ஐபிஎல் 2018 - புள்ளிகள் பட்டியல்
| வரிசை எண் | அணிகள் | ஆட்டங்கள் | வெற்றிகள் | தோல்விகள் | புள்ளிகள் | நெட் ரன்ரேட் |
| 1. | ஹைதராபாத் | 8 | 6 | 2 | 12 | 0.514 |
| 2. | சென்னை | 9 | 6 | 3 | 12 | 0.354 |
| 3. | கொல்கத்தா | 9 | 5 | 4 | 10 | 0.240 |
| 4. | பஞ்சாப் | 8 | 5 | 3 | 10 | 0.130 |
| 5. | மும்பை | 9 | 3 | 6 | 6 | 0.005 |
| 6. | பெங்களூர் | 8 | 3 | 5 | 6 | -0.301 |
| 7. | தில்லி | 9 | 3 | 6 | 6 | -0.450 |
| 8. | ராஜஸ்தான் | 8 | 3 | 5 | 6 | -0.726 |