செய்திகள்

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 240 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய மே.இ.தீவுகள் அணி நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதன்மூலம், 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.
முன்னதாக, கடந்த சனிக்கிழமை தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மே.இ.தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து 102.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 373 ரன்கள் குவித்தது. இதையடுத்து களம் இறங்கிய மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 221 ரன்களில் சுருண்டது.
நியூஸிலாந்து தனது 2-ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 444 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு தனது 2-ஆவது இன்னிங்ஸில் களம் இறங்கியது மே.இ.தீவுகள். மூன்றாவது நாளான திங்கள்கிழமை ஆட்ட நேர முடிவில், அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை விளையாடிய அந்த அணியின் வீரர்கள், நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில் 63.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 203 ரன்களில் மே.இ.தீவுகள் சுருண்டது.
இந்த ஆட்டத்தில், வாக்னர் வீசிய பந்தை எதிர்கொண்டபோது மே.இ.தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் அம்பிரிஸ் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் மீண்டும் ஆடவரமால் ஓய்வு (ரிட்டயர்டு அவுட்) பெற்றார்.
அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 64 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிம் சௌதி 2, போல்ட் 2, மிச்சல் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இவ்வாறாக 240 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, இரண்டாவது டெஸ்டின் 2-ஆவது இன்னிங்ஸில் தனது 17-ஆவது சதத்தைப் பதிவு செய்த நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளும் 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாட உள்ளது. முதல் ஒரு நாள் ஆட்டம் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு, நியூஸிலாந்து லெவன் அணியுடன் மே.இ.தீவுகள் வரும் 17-ஆம் தேதி ஒரு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரம்
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளை கைப்பற்றுவதற்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மிக முக்கியப் பங்கு வகித்தனர்; அவர்கள் அபாரமாகச் செயல்பட்டனர் என்று வெற்றிக் களிப்பில் இருந்த நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT