ஐபிஎல்-ன் வெற்றிச்சூத்திரங்களில் ஒன்று - சிக்ஸர்கள். ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளைத் தவறாமல் பார்க்க இது முக்கிய காரணம். கெய்ல், டிவில்லியர்ஸ் ஆடும்போது தவறாமல் பார்ப்பதற்கும் இதுதான் காரணம்.
ஆனால் இரு சிறிய அணிகள் மோதிய போட்டி ஒன்று அதிக சிக்ஸர்களில் புதிய சாதனை படைத்துவிட்டது.
பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறக்கூடிய வாய்ப்பு மிகக்குறைவாக உள்ள அணிகளான டெல்லி - குஜராத் அணிகளின் வீரர்கள் நேற்றைய ஆட்டத்தில் போட்டி போட்டிக்கொண்டு சிக்ஸர்கள் அடித்தார்கள். ஒட்டுமொத்தமாகக் கிட்டத்தட்ட 38 ஓவர்கள் வீசப்பட்ட இந்த ஆட்டத்தில் 31 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் டெல்லி வீரர்கள் மட்டும் 20 சிக்ஸர்கள்! ஒருசமயம் சாம்சனும் ரிஷப் பந்தும் இணைந்து தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள் அடித்தார்கள். சிக்ஸர் மழையை ஆனந்தமாக ரசித்தார்கள் டெல்லி ரசிகர்கள்.
முதலில் விளையாடிய குஜராத் வீரர்கள் 11 சிக்ஸர்கள் அடித்தார்கள். தினேஷ் கார்த்திக் - 5, ரெய்னா - 4, ஜடேஜா - 2.
209 ரன்கள் இலக்கு. இதனால் முதல் ஓவரிலிருந்து அதிரடியாக ஆரம்பித்தார்கள் டெல்லி வீரர்கள். ஓவருக்கு ஓவர் தொடர்ச்சியாக சிக்ஸ் அடிக்க அவர்களால் முடிந்தது. 3-வது ஓவரிலிருந்து 14-வது ஓவர் வரை 12 ஓவர்களில் 16 சிக்ஸர்களை அடித்தார்கள் பந்தும் சாம்சனும்.
19 வயது ரிஷப் பந்த் 9 சிக்ஸர்கள் அடித்தார். அதகளமான ஆட்டம். ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்டர்சன் ஆகிய இருவரும் தலா 2 சிக்ஸர்கள் அடித்தார்கள். இதில் சஞ்சு சாம்சன் அநியாயம். 61 ரன்கள் எடுத்தாலும் அதில் ஒரு பவுண்டரி கூட கிடையாது. 7 சிக்ஸர்கள் அடித்து ஆனந்தம் அடைந்துகொண்டார்.
இப்படி ஆளாளுக்குப் போட்டி போட்டிக்கொண்டு சிக்ஸர்கள் அடித்து இந்த ஆட்டத்தை ஐபிஎல் சாதனைப் பட்டியலில் இடம்பிடிக்கவைத்துவிட்டார்கள்.
ஐபிஎல் போட்டியில் அதிக சிக்ஸர்கள்
31 டெல்லி - குஜராத் 2017
30 சிஎஸ்கே - ராஜஸ்தான், 2010
25 பஞ்சாப் - சென்னை, 2008
25 குஜராத் - பெங்களூர் 2017
நேற்றைய போட்டியில் சிக்ஸர்கள் அடித்தவர்கள்
ரிஷப் பந்த் - 9
சாம்சன் - 7
தினேஷ் கார்த்திக் - 5
ரெய்னா - 4
ஜடேஜா - 2
ஸ்ரேயாஸ் - 2
ஆண்டர்சன் - 2
அதிக சிக்ஸர்களை வாரி வழங்கிய பந்துவீச்சாளர்?
சங்க்வான், பசில் தம்பி, ஃபாக்னர் ஆகிய நான்கு குஜராத் பந்துவீச்சாளர்களும் தலா 4 சிக்ஸர்களை வாரி வழங்கியுள்ளார்கள். அதாவது டெல்லி வீரர்கள் பாரபட்சம் இல்லாமல் அனைத்து பந்துவீச்சாளர்களையும் வெளுத்து வாங்கியுள்ளார்கள்.
பாராட்டு
இதில் பாராட்டப்படவேண்டியவர், டெல்லி பந்துவீச்சாளரான பேட் கம்மின்ஸ். 4 ஓவர்கள் வீசியும் சிக்ஸ் மழை பொழிந்த ஆட்டத்தில், சிக்ஸ் விட்டுக்கொடுக்காத ஒரே பந்துவீச்சாளர்.
ரிஷப் பந்த் அடித்த 9 சிக்ஸர்களின் வீடியோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.