செய்திகள்

சூறாவளி சதத்தின் ரகசியம் உடைத்த டிவில்லியர்ஸ்

Raghavendran

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்த வங்கதேச அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 2-0 என டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது.

இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து புதன்கிழமை நடந்த 2-ஆவது போட்டியிலும் 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை நசுக்கியது.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஏ.பி. டிவில்லியர்ஸ், சூறாவளி சதத்தை பதிவு செய்தார். மொத்தம் 104 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 7 இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 176 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இதுகுறித்து டிவில்லியர்ஸ் கூறியதாவது:

மனதளவில் நான் மிகவும் வலுவிழந்து காணப்பட்டேன். இதனால் சிறிது காலம் எனது குடும்பத்துடன் தனிமையில் இருக்க விரும்பினேன். இந்த ஓய்வு எனக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது அணிக்காக விளையாடுவதை நான் என்றும் கௌரவமாகக் கருதுகிறேன்.

இந்த சிறிய இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் கடுமையானப் பயிற்சியில் ஈடுபட்டேன். இனிவரும் காலங்களில் அனைத்து ரக போட்டிகளிலும் களம் காண உள்ளேன். இந்தப் போட்டி எனக்கு மீண்டும் எனது முதல் போட்டியாக அமைந்தது போன்று உணர்ந்தேன். ஆரம்பத்தில் சற்று பதட்டமாக இருந்தது, பின்னர் சரியாகி விட்டது என்றார்.

வங்கதேசத்துக்கு எதிராக டிவில்லியர்ஸ் அடித்த இந்த 176 ரன்கள் தான் ஒருநாள் போட்டிகளில் அவருடைய தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இருப்பினும் 12 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க வீரரின் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோரை (கேரி கிறிஸ்டன் 188*) முறியடித்திருக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல் இதன்மூலம் குறைந்த பந்துகளில் அதிவேக அரைசதம், சதம் மற்றும் 150 ரன்களைக் கடந்தவர் என்ற புதிய சாதனையையும் டிவில்லியர்ஸ் படைத்தார். 

இந்நிலையில், 176 ரன்களில் ஆட்டமிழந்ததால் இரட்டைச் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மேலும் குறைந்த பந்துகளில் இரட்டைச் சதமடித்த மே.இ.தீவுகளின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் (138 பந்துகளில் இரட்டைச் சதம்) சாதனையையும் வென்றிருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT