எதிர்வரும் ஐபிஎல் போட்டியில், ஓர் அணி, தன்னிடம் இருக்கும் வீரர்களில் 5 பேரை ஏலமின்றி தக்கவைத்துக் கொள்வதற்கு ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் முடிவு செய்தது. ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாக நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் (ரைட் டூ மேட்ச் முறையில்) தக்கவைக்கலாம். இது, தடைக்காலம் முடிந்து 2018-ஆம் ஆண்டு சீசனில் போட்டிக்குத் திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த 2015-ம் ஆண்டில் தங்கள் வசம் இருந்த வீரர்களை ஏலமின்றி தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், ஒவ்வொரு அணியும் யார் யாரைத் தக்கவைத்து கொண்டுள்ளன என்கிற விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் இந்த சீசன் முதல் மீண்டும் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, எம்.எஸ்.தோனி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோரை தனது அணியில் தக்க வைத்துக் கொண்டது.
மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ், சர்ஃப்ராஸ் கானை தக்க வைத்து, கிறிஸ் கெயிலை ஏலத்தில் விட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது கேப்டன் ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ராவை அணியில் தொடரச் செய்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை ஏலத்தில் எடுத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், புவனேஸ்வர் குமார் ஆகியோரை தக்க வைத்துக் கொண்டது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அக்ஸர் படேலை தன் வசம் வைத்துக் கொண்டது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி கிறிஸ் மோரிஸ், ரிஷப் பந்த், ஷரேயஸ் ஐயர் ஆகியோரை தக்க வைத்தது. அத்துடன்
ரிக்கி பான்டிங் பயிற்சியாளராக இருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கேப்டன் கெளதம் கம்பீரை ஏலத்தில் விடுவித்ததுடன், மேற்கிந்தியத் தீவுகளின் சுனில் நரைனை தக்கவைத்து, அன்ட்ரு ரஸலை ஏலத்தில் எடுத்தது.
கொல்கத்தா அணியின் அடையாளமாக உள்ள கம்பீரைத் தக்கவைக்காதது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இதன்மூலம் கம்பீரின் ஐபிஎல் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரவுள்ளது.
2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. அப்போது அந்த அணியின் கேப்டனாக இருந்தவர் கம்பீர். ஆனால் இந்தமுறை வேறு திட்டங்களுடன் களமிறங்கவுள்ளது கேகேஆர் அணி. கம்பீரைத் தக்கவைக்காமல் போனாலும் ஏலத்தில் குறைந்த தொகையில் எடுக்கவுள்ளார்களா என்பது இனிமேல் தான் தெரியவரும். இல்லையென்றால் தில்லி அணி கம்பீரைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல கேகேஆர் அணியின் சக்திமிக்க வீரரான யூசுப் பதானையும் தக்கவைக்காதது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சரியான ஃபார்மில் இல்லாததால் ஏலத்தில் குறைந்த தொகையில் தேர்வு செய்ய வாய்ப்புண்டு.
பெங்களூர் அணிக்குப் பெரிய பலமாக இருந்த கிறிஸ் கெயிலுக்கும் இந்த ஏலம் ஏமாற்றமாக அமைந்துள்ளது. கடந்த ஐபிஎல்-லில் சரியாக விளையாடாமல் போனாலும் இதர டி20 லீக்குகளில் நன்றாக விளையாடி வருகிறார் கெய்ல். இந்த நிலையில் இவரைத் தவிர்த்துவிட்டு பெங்களூர் அணி இளம் வீரர் சர்ஃப்ராஸ் கானைத் தேர்வு செய்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதனால் அந்த அணி கெயிலைத் தவிர்க்கிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான விடை ஜனவரி 27- 28 தேதிகளில் நடைபெற்றவுள்ள ஏலத்தில்தான் தெரியவரும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்த்ததுபோல தோனி, ரெய்னா, ஜடேஜாவைத் தேர்வு செய்துள்ளது. எனினும் அஸ்வினைத் தேர்வு செய்யாதது பலரையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. உள்ளூர் வீரர்களுக்கு சென்னை அணி முக்கியத்துவம் கொடுக்கும் என்பதால் ஏலத்தில் அஸ்வின், பிராவோ, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரைத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.