செய்திகள்

பிரேஸில்-சுவிட்சர்லாந்து ஆட்டம் டிரா (1-1)

DIN

6-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வெல்லும் கனவோடு இறங்கியுள்ள பிரேஸில் அணியும்-சுவிட்சர்லாந்து அணியும் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
குருப் ஈ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேஸில் அணி அனைத்து உலகக் கோப்பையிலும் பங்கேற்ற சிறப்புடையது. சொந்த மண்ணில் கடந்த 2014-இல் நடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் 7-1 என ஜெர்மனியிடம் தோல்வியுற்ற பிரேஸில் அதில் இருந்து மீண்டு தற்போது வலுவான அணியாக வந்துள்ளது.
பட்டம் வெல்லும் அணியாக கணிக்கப்பட்டுள்ள அந்த அணியில் நட்சத்திர வீரர் நெய்மர் காயத்தில் இருந்து மீண்டும் ஆடி வரும் நிலையில் கப்ரியேல் ஜீஸஸ், வில்லியன், ஆகியோர் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டம் தொடங்கிய 20-வது நிமிடத்தில் பிரேஸில் வீரர் மார்செலோ கடத்திய பந்து மூலம் பிலிப் குட்டின்ஹோ சிறப்பாக கோலடித்து முன்னிலை பெற்று தந்தார். இதன் மூலம் 1-0 என முன்னிலை பெற்றது.
எனினும் அதன் தாக்கத்தின் மூலம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த தவறியது பிரேஸில் அணி. இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணிக்கு கிடைத்த ஷாகின் அடித்த கார்னர் மூலம் ஸ்டீவன் ஸþபர் அளித்த வலுவான பந்து கோலாகியது. இதன் மூலம் 1-1 என சமநிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நெய்மர், பெர்ணான்டின்ஹோ ஆகியோர் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் வீணாகின. ஆட்டம் முடிய 20 நிமிடங்கள் இருக்கையில் குட்டின்ஹோ, ராபர்டோ பிர்மின்ஹோ ஆகியோர் கோலடிக்க முயன்றும் முடியவில்லை.இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.
சிறிய அணியான சுவிட்சர்லாந்திடம் ஜாம்பவான் பிரேஸில் அணி டிரா செய்தது அதன் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரூப் ஈ பிரிவில் செர்பியா அணி 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பிரேஸில், சுவிட்சர்லாந்துக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

சிங்கமா-ஆடா?
ஜாம்பவான் அணிகளான ஜெர்மனி, பிரேஸிலை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் சாடியுள்ளனர். நடப்புச் சாம்பியன் ஜெர்மனி 0-1 என மெக்ஸிகோவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 5 முறை சாம்பியன் பிரேஸில், சிறிய அணியான சுவிட்சர்லாந்துடன் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளையும் சமூக வலைதளங்களான சுட்டுரை, முகநூலில் ரசிகர்கள் சாடியுள்ளனர்.
நெய்மர் சிங்கம் போல் விளையாடுவார் என எதிர்பார்த்தால், ஆடு போல் செயல்பட்டுள்ளார் என மற்றொரு ரசிகர் கட்டுரையில் கிண்டல் செய்துள்ளார். மேலும் 75 ஆண்டுகள் கழித்து ஜெர்மனி மீண்டும் ரஷியாவுக்கு சென்று தோல்வியை சந்தித்துள்ளது என சாடியுள்ளனர்.

நாக் அவுட் சுற்றுக்கு ஜெர்மனி தகுதி பெறும்
மெக்ஸிகோவிடம் 1-0 என அதிர்ச்சித் தோல்வி அடைந்த நிலையிலும் நாக் அவுட் சுற்றுக்கு ஜெர்மனி தகுதி பெறும் என அதன் பயிற்சியாளர் ஜோசெம் லியு நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 1982- போட்டிக்கு பின்னர் ஜெர்மனி அணி முதன்முறையாக தொடக்க ஆட்டத்திலேயே தோல்வியை சந்தித்துள்ளது. எனினும் ஜெர்மனி வீரர்கள் சரியாக ஆடவில்லை. எங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்டுத்தவில்லை. ஒரு தோல்வியால் துவண்டு விடப் போவதில்லை. இன்னும் ஸ்வீடன், தென் கொரியாவுடன் ஆட்டங்கள் உள்ளன. நாங்கள் அதில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்றார்.

சலா வருகையால் ரஷியாவுக்கு சிக்கல்
எகிப்து அணியில் நட்சத்திர வீரர் முகமது சலா மீண்டும் விளையாட உள்ள நிலையில் ரஷிய அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெறுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரீமியர் லீக் போட்டியில் 44 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ள சலா, தோளில் காயமடைந்தார். இதனால் உலகக் கோப்பை போட்டியில் எகிப்து சார்பில் விளையாடுவாரா என கேள்விக்குறி எழுந்தது. இதற்கிடையே அவர் குணமடைந்து அணியில் சேர்க்கப்பட்டார். 
போட்டியை நடத்தும் ரஷியாவும்-எகிப்தும் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன. இந்நிலையில் நட்சத்திர வீரர் சலா இதில் இடம் பெற்று ஆடுகிறார். சலா 100 சதவீதம் உடல்தகுதியுடன் உள்ளார் என மருத்துவர் தெரிவித்துள்ளார். 
அவரது வருகை ரஷிய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

மெக்ஸிகோ ரசிகர்கள்கொண்டாட்டத்தால் நிலநடுக்கம்
நடப்புச் சாம்பியன் ஜெர்மனியை எதிர்பாராத நிலையில் வென்றதால் மெக்ஸிகோ சிட்டி நகரில் ரசிகர்கள் கொண்டாட்டம் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெக்ஸிகோ சிட்டி நகரில் கால்பந்து ரசிகர்கள் திரண்டு கொண்டாடினர். லோஸான்சோ வெற்றி கோலடித்த அதே நேரத்தில் ரசிகர்களின் தீவிர கொண்டாட்டம், குதித்து 
கொண்டாடியது, 
அந்நகரில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டது போல் இருந்ததாக நிலநடுக்க கண்காணிப்பு பிரிவு கட்டுரையில் (டுவிட்டர்) கூறியுள்ளது.

ஜப்பான்-கொலம்பியா
குரூப் எச் பிரிவில் ஜப்பான்-கொலம்பியா அணிகள் மோதும் ஆட்டம் சரன்ஸ்க் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 
கொலம்பிய அணியில் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் உடல் தகுதி கேள்விக்குறியாக உள்ளது. கொலம்பியா அணி கடந்த 2014 போட்டியில் காலிறுதி வரை முன்னேறியது. ரோட்ரிக்ஸ் அப்போட்டியில் அதிக கோல்கள் 6 அடித்தவர் என்ற சிறப்பை பெற்றார். மேலும் மற்றொரு வீரர் வில்மர் பாரியாஸும் உடல்தகுதி இல்லாமல் அவதிப்பட்டு வருவது கொலம்பியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில் ஜப்பான் அணி 2 மாதங்களுக்கு மேலாக பயிற்சியாளர் இல்லாமல் செயல்பட்டு வந்தது. கடந்த 2002 போட்டியில் ஜப்பான் 2-வது சுற்று வரை முன்னேறியது. பயிற்சியாளர் இல்லாத நிலையில் சிரமத்துக்கு ஆளாகியது. எனினும் நாங்கள் சமாளித்து ஆடுவோம் என அதன் கேப்டன் மகோடோ நம்பிக்கை தெரிவித்தார்.

போலந்து-செனகல்
போலந்து-செனகல் அணிகள் ஆட்டம் மாஸ்கோவின் ஸ்பார்டக் மைதானத்தில் நடக்கிறது. இதில் நட்சத்திர வீரர்கள் போலந்தின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி, செனகலின் சாடியோ மேன் ஆகியோர் எதிர் எதிரே களம் காண்பதால் ஆட்டம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் ஐரோப்பிய கால்பந்து லீக்கின் சிறப்பான தாக்குதல் ஆட்டக்காரர்களாக திகழ்கின்றனர். போலந்து அணி 8-வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது. அதே நேரத்தில் செனகல் ஓரே ஒரு முறை தகுதி பெற்றது. கடந்த 2002 போட்டியில் நடப்புச் சாம்பியனாக இருந்த பிரான்ஸை தோல்வியுறச் செய்து காலிறுதி வரை முன்னேறியது செனகல். இரு அணிகள் மோதவுள்ள ஆட்டமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT