இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து டிஎல்எஸ் முறையில் இந்திய அணிக்கு 11 ஓவர்களில் 90 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தில் வென்று ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. எனவே, 2-ஆவது ஆட்டத்தில் வென்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க இயலும் என்ற நிலையில், இந்தியா களம் காண்கிறது. தொடக்க ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்தியா, அதிலிருந்து மீண்டு வரும் முனைப்பில் உள்ளது. ஏனெனில், கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 7 டி20 தொடர்களை கைப்பற்றியுள்ளது. எனவே, இந்தத் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் 2-ஆவது டி20 ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
மழையால் டாஸ் நிகழ்வு சற்று தாமதமானது. இதன்பிறகு டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் டி20 ஆட்டத்தில் விளையாடிய அதே அணியை இந்த ஆட்டத்துக்கும் அவர் தேர்வு செய்துள்ளார்.
முதல் ஓவரிலேயே கேப்டன் ஃபிஞ்ச் எதிர்கொண்ட முதல் பந்தில் அவரை வெளியேற்றினார் புவனேஸ்வர். 2-வது ஓவரை கலீல் அஹமது வீசினார். இதனால் அதே அணியைத் தேர்வு செய்தாலும் இந்திய அணியின் திட்டங்களில் மாறுதல் ஏற்பட்டிருந்தது. புவனேஸ்வர் வீசிய 3-வது ஓவரில் ரிஷப் பந்தும் பூம்ராவும் கேட்சுகளை நழுவவிட்டார்கள்.
சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது நல்ல பலனைத் தந்தது. 1 சிக்ஸரும் 1 பவுண்டரியும் அடித்த லின், 13 ரன்களில் கலீல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தனது அடுத்த ஓவரில் ஷார்ட்டை 14 ரன்களில் வீழ்த்தினார் கலீல். புவனேஸ்வரும் கலீலும் விக்கெட்டுகள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரில் ஸ்டாஸ்னிஸை 4 ரன்களில் வெளியேற்றினார் பூம்ரா.
பிறகு 11-வது ஓவரில் மேக்ஸ்வெல்லை 19 ரன்களில் க்ளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார் கிருனால் பாண்டியா. இதனால் 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்து தடுமாற்றம் கண்டது ஆஸ்திரேலிய அணி. முதல் டி20 ஆட்டத்தில் செய்த தவறுகளை இந்தமுறை மீண்டும் செய்யாமல் ஆஃப் சைடில் அதிகமாகப் பந்துவீசி ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தந்தார்கள் இந்திய பந்துவீச்சாளர்கள். மெல்போர்ன் மைதானத்தில் இருந்த 64,000 ரசிகர்களில் இந்திய அணிக்கு அதிக ஆதரவு கிடைத்தது. இந்திய ரசிகர்கள் அதிக அளவில் வருகை தந்து இந்திய அணியைத் தொடர்ந்து உற்சாகமளித்தார்கள்.
எதிர்கொண்ட 9 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என அச்சுற்றுத்தலாக விளங்கிய கோல்டர் நைல், 20 ரன்களில் புவனேஸ்வர் பந்துவீச்சில் சப் ஃபீல்டரான மனீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்கள வீரரான பென் மெக்டர்மாட்டும் டையும் கடைசிக்கட்டத்தில் ஓரளவு ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
19 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. மெக்டர்மாட் 32, டை 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்திய அணித் தரப்பில் புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.
மழையால் தடைபட்டதால் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸ் 19-வது ஓவருடன் முடிந்தது. டிஎல்எஸ் முறையில் இந்திய அணிக்கு 11 ஓவர்களில் 90 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடைசித் தகவல்: மழை காரணமாக இந்திய அணியின் இன்னிங்ஸ் 5 ஓவர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு 5 ஓவர்களில் 46 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.