இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 4-ம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 4-ம் நாளில் இங்கிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசியது. 2-வது இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் புஜாராவும் ரஹானேவும் அற்புதமான கூட்டணி அமைத்து இந்தியாவைக் காப்பாற்றினார்கள். ரஹானே 61, புஜாரா 45 ரன்களுடன் ஆட்டமிழந்தார்கள். ஜடேஜா 3 ரன்களில் அலி பந்தில் ஆட்டமிழந்தார்.
4-ம் நாள் முடிவில் இந்திய அணி, 82 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 14, இஷாந்த் சர்மா 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இன்னும் 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி, 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி நாளில் இந்திய அணி அதிக ரன்கள் எடுத்து வெற்றிக்கு முயற்சி செய்யுமா அல்லது ஆட்டம் டிரா ஆகுமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். எனினும் தற்போதைய சூழல் இங்கிலாந்து அணிக்குச் சாதகமான நிலையில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.