நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றியை நெருங்கி வருகிறது.
ஆட்டம் சனிக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், 332 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடி வரும் நியூஸிலாந்து, வெள்ளிக்கிழமை முடிவில் 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. கடைசி நாளில் வங்கதேசம் எஞ்சிய விக்கெட்டுகளையும் சாய்த்து வெற்றி காணும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 310 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து 317 ரன்களுக்கு முடித்துக் கொண்டது. இந்நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை ஆடிவந்த வங்கதேசம், வியாழக்கிழமை ஆட்டத்தை 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்களுடன் நிறைவு செய்திருந்தது.
4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, நஜ்முல் ஹுசைன் ஷான்டோ, முஷ்ஃபிகா் ரஹிம் ஆகியோா் ஆட்டத்தை தொடா்ந்தனா். இதில் ஷான்டோ 10 பவுண்டரிகள் உள்பட 105 ரன்களுக்கு வெளியேற, ரஹிம் 7 பவுண்டரிகளுடன் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஷஹாதத் ஹுசைன் 18, நூருல் ஹசன் 10, நயீம் ஹசன் 4, தைஜுல் இஸ்லாம் 0, ஸோரிஃபுல் இஸ்லாம் 10 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, வங்கதேச ஆட்டம் 338 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
நியூஸிலாந்து பௌலிங்கில் அஜாஸ் படேல் 4, இஷ் சோதி 2, டிம் சௌதி, கிளென் ஃபிலிப்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். இதையடுத்து 332 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிவரும் நியூஸிலாந்தில், டாம் லேதம் 0, டெவன் கான்வே 3 பவுண்டரிகளுடன் 22, கேன் வில்லியம்சன் 11, ஹென்றி நிகோலஸ் 2 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். டாம் பிளண்டெல் 6, கிளென் ஃபிலிப்ஸ் 12, கைல் ஜேமிசன் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
வெள்ளிக்கிழமை முடிவில் டேரில் மிட்செல் 44, இஷ் சோதி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4, ஷோரிஃபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ், நயீம் ஹசன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.